உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லாரியை கடத்திய நபர்: மீட்க 5 கி.மீ., தொங்கியபடி சென்ற சிறப்பு எஸ்.ஐ.,

லாரியை கடத்திய நபர்: மீட்க 5 கி.மீ., தொங்கியபடி சென்ற சிறப்பு எஸ்.ஐ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மேல்மருவத்துார் அருகே, சோத்துப்பாக்கம் பகுதியில் இருந்து ஜல்லி கற்கள் ஏற்றிய, டாரஸ் லாரி, குன்றத்துார் நோக்கிச் சென்றது. லாரி ஓட்டுநர் கமலக்கண்ணன், 40, என்பவர், செங்கல்பட்டு, பரனுார் சுங்கச்சாவடி அருகே சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு, சுங்க கட்டணம் செலுத்துவதற்கான, 'பாஸ்டேக்' அட்டைக்கு 'ரீசார்ஜ்' செய்ய சென்றுள்ளார்.அப்போது, மர்ம நபர் ஒருவர் லாரியை கடத்தி சென்றதால், அங்கு பணியில் இருந்த செங்கல்பட்டு தாலுகா போலீசாரிடம், கமலக்கண்ணன் தெரிவித்தார். அவர்கள், ஜி.எஸ்.டி., சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே, சோதனைச்சாவடி பணியில் இருந்த மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, இரு சக்கர வாகனத்தில் துரத்திச் சென்றனர்.மறைமலைநகர் போலீசார் இரும்பு தடுப்புகள் வைத்து தடுக்க முயன்றபோது செட்டிபுண்ணியம் சந்திப்பு, திருத்தேரி, சிங்கபெருமாள் கோவில் சந்திப்பு, பேரமனுார் சந்திப்புகளில், டாரஸ் லாரி நிற்காமல் வேகமாக சென்றது. மறைமலை நகர் சாமியார் கேட் சந்திப்பில், சரக்கு வாகனங்கள், இரும்பு தடுப்புகளை ஜி.எஸ்.டி., சாலையின் குறுக்கே போலீசார் அமைத்தனர்.அப்போது, டாரஸ் லாரியை ஓட்டிவந்த மர்ம நபர், ஜி.எஸ்.டி., சாலைக்கும், அணுகுசாலைக்கும் இடையே உள்ள தடுப்பு சுவரில் மோதி லாரியை நிறுத்தினார். இந்த விபத்தை கண்ட சக வாகன ஓட்டிகள், மர்ம நபரை பிடித்து சரமாரியாக தாக்கினர். அவரை மீட்ட மறைமலை நகர் போலீசார், 108 ஆம்புலன்ஸ் வாயிலாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, சிகிச்சைக்கு அனுப்பினர்.போலீஸ் விசாரணையில் அந்த நபர், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையை சேர்ந்த சுபாஷ், 40, என தெரிந்தது. மனநலம் பாதிக்கப்பட்ட இவர், சில நாட்களாக பரனுார் சுங்கச்சாவடி பகுதியில் சுற்றித் திரிந்தது தெரிந்தது. சுபாஷின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

நுாலிழையில் தப்பிய சிறப்பு எஸ்.ஐ.,

ஜி.எஸ்.டி., சாலை - திருத்தேரி சந்திப்பில் பணியில் இருந்த போக்குவரத்து சிறப்பு எஸ்.ஐ., பாலமுருகன், லாரியை மடக்கினார். வேகம் குறைந்தபோது, லாரியின் கதவு வழியே ஏறினார். உடனே, சுபாஷ் மீண்டும் லாரியை வேகமாக இயக்க துவங்கினார். இதனால், பாலமுருகன் 5 கி.மீ., துாரம் லாரி ஓட்டுநர் ஏறும் வழியில், கதவில் நின்றபடியே பயணித்தார். பேரமனுார் சந்திப்பில், முன்புறம்சென்ற சரக்கு வாகனத்தின் அருகில் சென்றபோது, அதில் லாரி மோதாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ram pollachi
மே 21, 2025 14:55

மனநலம் பாதிக்கப்பட்ட எவரும் ரோட்டில் இருக்கும் மலத்தை எடுத்து சாப்பிட மாட்டார்கள்.


அப்பாவி
மே 21, 2025 11:37

எல்லாம் லாரியிலேயே சாவியை உட்டுட்டு வந்த தத்தியைச் சொல்லணும். ஒருத்தனையும் நம்ப முடியாது


அப்பாவி
மே 21, 2025 11:35

அடுத்த பொறந்நாளைக்கு ஃப்ரீ...


Padmasridharan
மே 21, 2025 09:33

மன நலம் பாதிக்கப்பட்டவரை அடித்து இருக்கிறார்கள் பிடித்து என்னவென்று விசாரிக்காமலேயே. இந்த செய்தியில் அவருடைய புகைப்படமோ சிறப்பு காவலரின் புகைப்படமோ வரவில்லையே ஏன் சாமியோவ்.


மனி
மே 21, 2025 04:59

மனநலம் பாதிக்கபட்ட லாரி ஓட்ட தெரியும். ஏன் ரேட்டுல உளுந்து சாகத் தெரிய த பிராடு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை