மார்கழி இசை கச்சேரி
பா ண்டுரங்கன் மீதான பக்தியை பறைசாற்றும் விதமாக, சக்குபாய் மற்றும் கோராகும்பர் கதைகளை வைத்து, பிரபல நடன கலைஞர் ரோஜா கண்ணனின் குழுவினர், நாட்டிய நாடகத்தை அழகாய் நிகழ்த்தினர். 'இதி சுகுமாருறே, காலிங்க நர்த்தன தில்லானா, வேத வேதாரே பண்டரி, பண்டரிநாத பாண்டுரங்கா' போன்ற பக்தி இசை பாடல்கள் பக்கப்பலமாய் திகழ்ந்தன. சிறுமி கட்டும் மணல் வீட்டை வயதான பெரியவர் ஒருவர் இடித்துவிட, அதற்கு மாற்றாக அந்த சிறுமிக்கு ஒரு பொம்மையையும், தம்பூராவையும் ஞான மந்திரத்தையும் உபதேசிக்கிறார் பெரியவர். அவளோ, வந்ததே இறைவன்தான் என அறியாது, பெரியவர் அறிவுரைப்படி பக்தியில் மூழ்குகிறாள். பின் திருமணம் முடித்துபுகுந்த வீடு செல்கிறாள். அங்கு, அத்தனை வேலைகளையும் இறைநாமத்துடன் சலிக்காமல் செய்கிறாள். ஒரு நாள் பாண்டுரங்கனை தரிசிக்க அனுமதி கேட்கிறாள். புகுந்த வீட்டு குடும்பத்தார் மறுத்ததோடு, அவளை அடித்து துாணில் கட்டுகின்றனர். அவள் பக்தியை மெச்சிய இறைவன், துாணில் உருமாறுகிறார். அவரை தரிசிக்க, அப்பெண் முக்தி பெறுகிறாள். பாண்டுரங்கனின் பக்தையான சக்குபாய் கதையை நாட்டியத்தில் அற்புதமாய் விளக்கினர். அடுத்ததாக, மண்பாண்டம் செய்யும் கோராகும்பர், தன் மனைவி மற்றும் குழந்தையுடன் ஏழ்மையில் வாடுகிறார். ஆனாலும், பாண்டுரங்கன் மீதான பக்தியில் துளியும் குறைவு இல்லை. ஒரு நாள் கோராகும்பர், மண்பாண்டம் செய்ய மண்ணை கால்களால் குழைக்கிறார். அப்போது தவறுதலாக மிதித்துவிடுவதால் குழந்தை இறந்துவிடுகிறது. பின் ஒரு சந்தர்ப்பத்தில் அவரது இரு கைகளையும் இழக்கிறார். இவ்வளவு துயரங்கள் ஏற்பட்டும், பாண்டுரங்கனை துதிக்கும் குடும்பத்தினர் முன் இறைவன் தோன்றி, கோராகும்பருக்கு இரு கைகளையும், இறந்த குழந்தையையும் உயிர்ப்பித்து தருகிறார். மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் சபாவில் நடந்த இந்த 'எமோஷனல்' நாட்டிய நாடகம், அத்தனை பேரின் கண்களிலும் நீர்பெருக செய்தது. -மா.அன்புக்கரசி