உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  திருமண மண்டபம் கட்டுமான பணி: கோர்ட் உத்தரவால் மீண்டும் துவக்கம்

 திருமண மண்டபம் கட்டுமான பணி: கோர்ட் உத்தரவால் மீண்டும் துவக்கம்

வேளச்சேரி: வேளச்சேரியில், இரண்டு ஆண்டுக்கு முன் நிறுத்தப்பட்ட திருமண மண்டபம் கட்டும் பணி, நீதிமன்ற உத்தரவால் மீண்டும் துவங்கியது. அடையாறு மண்டலம், 177வது வார்டு, வேளச்சேரி, புவனேஸ்வரி நகர் மற்றும் வி.ஜி.பி., செல்வா நகர் 2வது பிரதான சாலையில், அரசுக்கு சொந்தமான 55 சென்ட் இடம் உள்ளது. இதில், 35 சென்ட் இடம் வேளச்சேரி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியிலும், 20 சென்ட் இடம் சோழிங்கநல்லுார் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியிலும் உள்ளன. இந்த இடத்தை, போலி ஆவணங்கள் தயாரித்து, நான்கு பேர் ஆக்கிரமித்திருந்தனர். 15 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த வழக்கில், 2022ல், அது அரசு இடம் என, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, வேளச்சேரி தாலுகாவிற்கு உட்பட்ட, 35 சென்ட் இடத்தில், திருமண மண்டபம் கட்ட, 2022 - 23ம் நிதியாண்டில், மாநகராட்சி சார்பில், 6.92 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான பணி துவங்கிய நிலையில், ஆக்கிரமிப்பாளர்களில் ஒருவர், நீதிமன்ற உத்தரவை மறைத்து, மீண்டும் போலி ஆவணங்களை தாக்கல் செய்து வழக்கு தொடுத்தார். இதனால், திருமண மண்டபம் கட்டும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன், அரசுக்கு சொந்தமான இடம் என, நீதிமன்ற உத்தரவு வந்ததையடுத்து, மீண்டும் மண்டபம் கட்டும் பணி துவங்கியது. மேலும், 20 சென்ட் இடத்தை சோழிங்கநல்லுார் தாசில்தார் பாதுகாக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ