கணேசபுரம் மேம்பால பணி ஜனவரிக்குள் முடிக்க திட்டம் மேயர் பிரியா தகவல்
வியாசர்பாடி, வியாசர்பாடி, கணேசபுரம் மேம்பால கட்டுமான பணியை, ஜனவரிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார். வியாசர்பாடி, கணேசபுரத்தில் மேம்பால பணி; முல்லை நகர் விளையாட்டு வளாகம் கட்டுமான பணி மற்றும் கொடுங்கையூர் கால்வாய் தடுப்பு சுவர் கட்டும் பணிகளை, மேயர் பிரியா நேற்று, அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார். பருவமழை துவங்கும் முன், இப்பணிகளை விரைந்து முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பின், அவர் கூறியதாவது: வியாசர்பாடி, கணேசபுரம் மேம்பால பணியில் 58 மீ., ரயில்வே துறைக்கு உட்பட்ட பகுதியாக உள்ளது. இதற்கு என்.ஓ.சி., வாங்கி மாநகராட்சி மூலம் பணிகள் நடக்க உள்ளன. மேம்பால பணியால், ஓராண்டாக இப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தற்போது வடகிழக்கு பருவமழைக்காலம் என்பதால், சாலையை சரி செய்து, வரும் 10ம் தேதி தற்காலிகமாக போக்குவரத்தை திறந்து வைக்க உள்ளோம். மேம்பால பணிகளை, ஜனவரி மாதத்திற்குள் முடிக்க ஒப்பந்ததாரர்களிடம் அறிவுறுத்தியுள்ளோம். கூட்செட் பகுதியில், ரயில்வே துறைக்கு சொந்தமான 9 ஏக்கர் பரப்பு குளம் உள்ளது. ரயில்வே துறையின் அனுமதி பெற்று குளத்தை சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி செய்து வருகிறது. இவ்வாறு பிரியா கூறினார். இலவச தடுப்பூசி முகாம் சென்னையில் ஓராண்டில், 12,393 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் தரப்பட்டுள்ளது. செல்லப்பிராணிகளுக்கு இலவசமாக, 'ரேபிஸ்' நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம், வரும் 8ம் தேதி துவங்க உள்ளது. திரு.வி.க.நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணாம்மாபேட்டை, மீனம்பாக்கம் ஆகிய ஆறு இடங்களில் உள்ள செல்லப்பிராணிகள் சிகிச்சை மையத்தில், இந்த முகாம் நடைபெறும். செல்லப்பிராணிகள் வளர்ப்போர், nnaicorporation.gov.in/gcc/online-services என்ற இணையதளத்தில், தங்கள் நாய்களுக்கு உரிமம் பெற பதிவு செய்யலாம்.