பாலியல் குற்றச்சாட்டு புகார் எம்.டி.சி.,யில் விசாரணை குழு
சென்னை, மாநகர போக்குவரத்து கழகத்தில், பணியிட பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்க, புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.பெண் பணியாளர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வகையில், பெறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, மாநகர போக்குவரத்துக் கழகத்தில், மனிதவள மேலாண் அதிகாரி தலைமையில், மூன்று பேரை உள்ளடக்கிய புகார் குழு செயல்பட்டு வந்தது.தற்போது, சமூக நலத்துறையின் அறிவுறுத்தலின் பேரில், குழுவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதன்படி, தலைமை நிதி அலுவலர் தலைமையில், ஐந்து பேர் உள்ளடக்கிய புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.இதில், நான்கு பேர் மாநகர போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்.மாநகர போக்குவரத்து கழகத்தில், சில மாதங்களுக்கு முன், உதவி மேலாளர் ஒருவர் மீது பாலியல் புகார் வந்த நிலையில், தற்போது புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, இந்த புதிய குழு, பெயரளவில் இல்லாமல், ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என, பயணியர் வலியுறுத்தியுள்ளனர்.