கடினமான பாறைகளை குடைந்து மெட்ரோ பாதை: அதிகாரிகள் தகவல் ராயப்பேட்டை - ஆர்.கே.சாலை சுரங்க பணி நிறைவு
சென்னை, மாதவரம் - சிறுசேரி 'சிப்காட்' மெட்ரோ ரயில் தடத்தில், ராயப்பேட்டை - மயிலாப்பூர் ஆர்.கே.சாலை இடையே சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்துள்ளது. கடினமான பாறைகளை குடைந்து பாதை அமைத்தது சவாலாக இருந்ததாக, மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் இரண்டாவது கட்டமாக, மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணி நடந்து வருகிறது. இதில், மாதவரம் - சிறுசேரி 'சிப்காட்' வரையிலான 45 கி.மீ., வழித்தடத்தில் மாதவரம் பால்பண்ணை, சேத்துப்பட்டு, ராயப்பேட்டை, மயிலாப்பூர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் சுரங்கப்பாதை பணிகள் துவங்கி, தொடர்ந்து நடந்து வருகின்றன. இத்தடத்தில் ராயப்பேட்டையில் இருந்து மயிலாப்பூர் ஆர்.கே., சாலை வரை, மெட்ரோ ரயில் பாதைக்காக சுரங்கம் தோண்டும் 'பவானி' இயந்திரம், ஓராண்டுக்கும் மேலாக இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. பவானி இயந்திரம், 1.7 கி.மீ., குடைந்து, ஆர்.கே.சாலையுடன் தன் பணியை முடிக்கவுள்ளது. அடுத்த ஓரிரு நாட்களில், பவானி இயந்திரம் வெற்றிகரமாக வெளியேற்றப்படும் என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ராயப்பேட்டை - மயிலாப்பூர் ஆர்.கே.சாலை இடையே, சுரங்கம் தோண்டும் பணிகள், கடந்த ஆண்டு செப்டம்பரில் துவங்கி, தற்போது முடிந்துள்ளன. சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பவானி இயந்திரம், ஓரிரு நாட்களில் வெளியேற்றப்படும். நிலத்தில் இருந்து 22 மீட்டர் ஆழத்தில், சுரங்கம் தோண்டும் பணிகள் நடக்கின்றன. இத்தடத்தில் பல்வேறு இடங்களில் ராட்சத கற்கள், கடினமான பாறைகள் இருந்தன. இதனால், சுரங்கம் தோண்டும் பணி மிகவும் சவாலாக இருந்தது. மேலும், குடியிருப்புகள் நிறைந்த பகுதி என்பதால், ஒவ்வொரு முறையும் சோதனை நடத்திய பிறகே, அடுத்தக்கட்ட பணிகளை மேற்கொண்டோம். ராயப்பேட்டை மற்றும் ஆர்.கே.சாலையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் 50 சதவீதம் முடிந்துள்ளன. இந்த தடத்தில், அனைத்து மெட்ரோ ரயில் பணிகளும் வரும் 2027ல் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.