ஞாயிறு அட்டவணையில் மெட்ரோ ரயில் இயக்கம்
சென்னை: தமிழ் புத்தாண்டையொட்டி, மெட்ரோ ரயில்கள் இன்று ஞாயிறு கால அட்டவணைப்படி இயக்கப்பட உள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள், பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில், ஞாயிறு கால அட்டவணைப்படி இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ் புத்தாண்டான இன்று காலை 5:00 மணி முதல் பகல் 12:00 மணி வரையும், இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரையும், 10 நிமிட இடைவெளிகளில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். அதேபோல, பகல் 12:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை ஏழு நிமிட இடைவெளிகளில் மெட்ரோ ரயில் இயக்கப்படும். இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை 15 நிமிட இடைவெளிகளில், மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.