உறுப்புகள் தானம் வழங்கியோர் எம்.ஜி.எம்., சார்பில் கவுரவிப்பு
சென்னை, எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனை சார்பில், உடல் உறுப்பு தானம் வழங்கியோர் கவுரவிக்கப்பட்டனர். சென்னை, எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனையில், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை, அண்ணா நகர் தி.மு.க., - எம்.எல்.ஏ., மோகன், நடிகை நீலிமா ராணி ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவதற்காக, உடல் உறுப்புகள் தானம் அளித்தவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அழைத்து பாராட்டப்பட்டதுடன், சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிரசாந்த் ராஜகோபாலன் கூறியதாவது: கொடையாளர்களை பாராட்டுவது, அதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்துவதில் பெருமை கொள்கிறோம். இந்த உடல் உறுப்புகள் தானத்தால், பலர் உயிர் வாழ முடிகிறது. மூளைச்சாவு அடைந்தோரிடம் பெறப்படும் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கணையம், கருவிழி போன்ற உறுப்புகள் தானத்தால், பலரின் உயிர்களை காப்பாற்ற முடியும். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவே, இந்நிகழ்வு நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.