ஆவடியில் நள்ளிரவு மின் பிரச்னை 30,000 வீடுகள் இருளில் மூழ்கின
ஆவடி, ஆவடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு, அலமாதி துணை மின் நிலையத்தில் இருந்து, மின் பரிமாற்ற கோபுரம் வாயிலாக, மின் வினியோகம் செய்யப்படுகிறது.இந்த நிலையில், ஆவடி, வி.ஜி.வி., நகரில் உள்ள 110 கிலோ வோல்ட் திறன் உடைய மின் பரிமாற்ற கோபுரத்தின் 'ஜம்பர்' எனும் மின் கடத்தியில் பழுது ஏற்பட்டு, சேக்காடு துணை மின் நிலையத்திற்கான விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டது.இதையடுத்து, ஆவடி, சேக்காடு, பருத்திப்பட்டு, காமராஜர் நகர், பட்டாபிராம், தண்டுரை, ஜெ.ஜெ. நகர் மற்றும் திருநின்றவூர் சுற்றுவட்டார பகுதிகளில், இரவு 10:00 மணி முதல் குறைந்த மின் அழுத்த பிரச்னை ஏற்பட்டது.இப்பிரச்னையால் 30,000க்கும் மேற்பட்ட வீடுகளில், மூன்று மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், குழந்தைகள் முதல் பெரியோர் வரை கடும் அவதிக்குள்ளாகினர்.பின், கொரட்டூரில் இருந்து வந்த மின் வாரிய ஊழியர்கள் பழுதை சரி செய்த பின், அதிகாலை 2:00 மணியளவில் மின் விநியோகம் சீரானது.