மில்லிங் செய்தது ஓரிடம் சாலை அமைத்தது வேறிடம் கே.கே.நகரில் அலட்சிய பணி
கே.கே., நகர், கோடம்பாக்கம் மண்டலம், கே.கே., நகர் முனுசாமி சாலை மற்றும் பி.டி., ராஜன் சாலையை இணைக்கும் வகையில் லட்சுமணசாமி சாலை உள்ளது.மாநகராட்சியின் பேருந்து வழித்தட துறை பராமரிப்பில் உள்ள இச்சாலை, 1.30 கி.மீ., துாரம் உடையது. இதில், குடிநீர் வாரியம் சார்பில், பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகள் நடந்தன.அப்பணிகள் முடிந்த பின், அந்த பள்ளத்தில் சிமென்ட் கலவை கொட்டி சீரமைக்கப்பட்டது.தொடர்ந்து, சாலையை சீரமைக்க, இரு மாதங்களுக்கு முன், மாநகராட்சி சார்பில் 'மில்லிங்' செய்யப்பட்டது.ஆனால், அதிகாரிகள் முறையாக கண்காணிக்காததால், மில்லிங் செய்யப்படாத இடத்தில், தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இதனால் சாலை மட்டம் உயர்ந்து, அருகில் உள்ள வீடுகளில் மழைநீர் சூழும் நிலைமை ஏற்பட்டுள்ளது.அதேநேரம், மில்லிங் செய்த பகுதிகளில் இரண்டு மாதங்கள் கடந்தும், இன்னும் தார்ச்சாலை அமைக்கப்படவில்லை.இதனால், இருவழிப்பாதையாக உள்ள சாலையில், மில்லிங் செய்யாத பகுதியில் வாகனங்கள் செல்லும்போது தடுமாறி விபத்தில் சிக்கி வருகின்றன.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை முறையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.