சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும் தரமணி மக்களிடம் அமைச்சர் உறுதி
சென்னை,தரமணியில், பல மாதங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால், பாதிக்கப்பட்ட மக்களை, நேற்று இரவு சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன், இனிமேல் சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும் என, உறுதி அளித்தார். அடையார் மண்டலம், 178வது வார்டு தரமணி, பெரியார் நகர், மகாத்மா காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில், சில மாதங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. அதிகாரிகள் விசாரணையில், தனியார் விடுதிகள் சட்டவிரோதமாக மோட்டார் அமைத்து குடிநீர் திருடுவதால், பகுதி மக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்காததுடன், கழிவுநீர் கலந்த குடிநீராக வந்தது. இதனால், இரண்டு மாதங்களில், பகுதி மக்கள் 13 முறை சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இருந்தும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று இரவு, அமைச்சர் சுப்பிரமணியன், குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் வினய் உள்ளிட்ட அதிகாரிகளுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். சில மாதங்களாக, குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகவும், துர்நாற்றம் வீசுவதால் பயன்படுத்த முடியவில்லை எனவும் பகுதி மக்கள் கூறினர். இதையடுத்து, அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். அதன்பின், சட்ட விரோதமான குடிநீர் இணைப்புகளை துண்டித்து, பகுதி மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, பகுதி மக்களிடம் அமைச்சர் உறுதி அளித்தார்.