தேனாம்பேட்டை - சைதாபேட்டை மேம்பாலம் டிசம்பரில் திறப்பதாக அமைச்சர் வேலு உறுதி
சென்னை, ''தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை இடையே கட்டப்படும் இரும்பு துாண் மேம்பாலம், டிசம்பரில் திறக்கப்படும்,'' என, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு தெரிவித்தார். சென்னை அண்ணாசாலையில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை பேருந்து நிலையம் வரை, எல்டாம்ஸ் சாலை, எஸ்.ஐ.இ.டி., கல்லுாரி, செனடாப் சாலை, நந்தனம் மற்றும் சி.ஐ.டி., சாலை சந்திப்புகள் உள்ளன. மொத்தம், 3.5 கி.மீ., நீளமுள்ள இந்த சாலையை கடந்து செல்ல, 20 நிமிடங்கள் ஆகிறது. பண்டிகை மற்றும் முக்கியமான நாட்களில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஒரு மணி நேரத்திற்கு 10,000 வாகனங்கள் பயணிக்கும் வகையில், இந்த சாலை வடிவமைப்பு உள்ளது. ஆனால், 18,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் இச்சாலையை பயன்படுத்துகின்றன. வரும்காலங்களில் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, இதைக் கருத்தில் வைத்து, தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை இடையே, உயர்மட்ட மேம்பாலம் கட்ட, தமிழக அரசு, 621 கோடி ரூபாயை ஒதுக்கியது. மும்பையை சேர்ந்த ஜெ.குமார் என்ற கட்டு மான நிறுவனம் வாயிலாக, 2024 ஜனவரி முதல் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது வரை, 30 சதவீத கட்டுமான பணிகள் முடிந்து உள்ளன. மேம்பால கட்டுமான பணிகளை நெடுஞ் சாலைத்துறை அமைச்சர் வேலு, செயலர் செல்வராஜ், தலைமை பொறியாளர் சத்யபிரகாஷ் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது அமைச்சர் வேலு கூறியதாவது: தேனாம்பேட்டை - சைதாபேட்டை இடையே நான்கு வழித்தட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. முன்தயாரிப்பு இரும்பு துாண்களை பயன்படுத்தி, கட்டுமானம் செய்யப்பட்டு வருகிறது. அடித்தள கான்கிரீட் பணிகளை முடித்துவிட்டால், மற்ற பணிகளை எளிதாக முடிக்க முடியும். எனவே, மழை காலத்திற்குள் அடித்தள கான்கிரீட் பணிகளை முடிக்க, ஒப்பந்த நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேம்பால கட்டு மானம் நடக்கும் இடங்களில் போக்குவரத்து போலீசார், மின்வாரியம், மாநகராட்சி, குடிநீர் வாரியம், வனத்துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நடப்பாண்டு டிசம்பருக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.