சென்ட்ரலில் மாயமான சிறுவன் ஆந்திராவில் மீட்பு: 3 பேர் கைது
சென்னை:அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சஜிதா பேகம் என்ற பெண், 6 வயது மகன் சகிப் உதீன் மற்றும் 3 வயது மகன்களுடன், கடந்த 12ம் தேதி ரயிலில் சென்னை வந்துள்ளார். அப்போது சகிப் உதீன், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாயமானார்.தன் குழந்தையை காணவில்லை என, போலீசாரிடம் வாய்மொழியாக கூறிய சஜிதா பேகம், எட்டு நாட்களாக குழந்தை கிடைக்கவில்லை என்ற நிலையில், சென்னையிலிருந்து கேரளா சென்றுவிட்டார்.இந்நிலையில், சென்ட்ரல் ரயில்வே போலீசார், தனிப்படைகள் அமைத்து 100க்கும் மேற்பட்ட 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஐந்து பெண்கள், சிறுவனின் கை பிடித்து ஆந்திரா ரயிலில் ஏற்றியது தெரிந்தது.இந்நிலையில் சிறுவன் சகிப் உதீன், ஆந்திர மாநிலம், குண்டூர், நசரத்பேட்டை ரயில் நிலையம் அருகே இருப்பதை அறிந்தனர்.அங்கு சென்ற தனிப்படை போலீசார், சிறுவனை நேற்று மீட்டனர். தவிர, சிறுவனை கடத்திச் சென்ற, சரஸ்வதி, சஜ்ஜாவதி உட்பட மூன்று பெண்களையும் கைது செய்து, அவர்களை சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.