உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விடுபட்ட வடிகால் இணைப்பு பணி மணலி விரைவு சாலையில் ஆபத்து

விடுபட்ட வடிகால் இணைப்பு பணி மணலி விரைவு சாலையில் ஆபத்து

திருவொற்றியூர்:சென்னை மாநகராட்சியில், 2015ம் ஆண்டு வெள்ள பாதிப்பிற்கு பின், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியான, 3,220 கோடி ரூபாய் செலவில், திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்துார் உள்ளிட்ட, மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி நடைபெற்று முடிந்துள்ளது.இந்நிலையில், சில இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் விடுபட்டிருப்பதால், சாதாரண மழைக்கே மழைநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டது.அதன்படி, மணலி விரைவு சாலை ஒட்டிய, முல்லை நகர் துவங்கி, முருகப்பா நகர், ஜோதி நகர், மதுரா நகர் வரை, மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துள்ளன.மதுரா நகர் - கலைஞர் நகர் வரையிலான, 500 அடி துாரத்திற்கு மழைநீர் வடிகால் இணைக்கப்படாமல் பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. மாறாக, திறந்தவெளி கால்வாயாகவே உள்ளது. இந்த பகுதியில், 'டாஸ்மாக்' கடை இருப்பதால், 'குடி'மகன்கள் போதையில், கால்வாயில் தவறி விழ வாய்ப்புள்ளது.மழை காலத்தில், வெள்ள பாதிப்பு ஏற்பட்டால், கால்வாய் முழுதும் மூடி விடும். அப்போது, பள்ளம் தெரியாமல் சிலர் வாய்க்காலில் மூழ்கி இறக்க நேரிடும்.குறிப்பாக, இந்த 500 அடி துார கால்வாய் இணைக்கப்படாமல் இருப்பதால், 4, 6 ஆகிய வார்டுகளில் தேங்கும் மழைநீர் வெளியேறாத சூழல் ஏற்படும்.இந்த மழைநீர் வடிகால் பணியை முதல்வர் ஸ்டாலின், தலைமை செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், பலமுறை பார்வையிட்டு, பணிகளை முடுக்கி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதே நிலை நீடித்தால், எதிர்வரும் பருவமழையில் மேற்கு பகுதி முழுதும் இணைக்கப்படாத மழை நீர் வடிகாலால், மூழ்கும் அபாயம் உள்ளது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, மழைநீர் வடிகால் இணைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை