உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பணி செய்வதில் துறைகளுக்குள் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

பணி செய்வதில் துறைகளுக்குள் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

சோழிங்கநல்லூர்,இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., பகுதியை உள்ளடக்கிய சோழிங்கநல்லூர் மண்டலத்தில் உள்ள ஒன்பது வார்டுகளில், குடிநீர், கழிவுநீர் குழாய் பதிப்பு, மழைநீர் வடிகால்வாய், மூடு கால்வாய், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன.பல்வேறு துறைகள் இந்த பணிகளை செய்வதால், ஒருங்கிணைப்பு இல்லாமல் சாலைகளை தாறுமாறாக சேதப்படுத்தி பள்ளம் எடுக்கின்றனர்.இதனால், துறைகளுக்குள் ஒருங்கிணைப்பு ஏற்படுத்த, சோழிங்கநல்லுார் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், மண்டல குழு தலைவர் மதியழகன் ஆகியோர் தலைமையில், நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில், குடிநீர் வாரியம், பொதுப்பணி, நெடுஞ்சாலை, மாநகராட்சி, மின் வாரியம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.அப்போது, தங்களிடம் முறையாக அனுமதி பெறாமல் சாலையில் பள்ளம் எடுப்பதாக, அனைத்து துறை அதிகாரிகள் மீது, மாநகராட்சி அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.சில சாலைகளுக்கு, சாலை துண்டிப்பு கட்டணம் செலுத்தாமல் பள்ளம் எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரே சாலையில் வடிகால்வாய் பணி மற்றும் குடிநீர் கழிவுநீர் குழாய் பதிப்பு பணிகள் நடப்பதால், பொதுமக்களுக்கு பெரிய அளவில் சிரமம் ஏற்படும்.ஏதாவது ஒரு துறையின் பணி முடிந்த பின், அடுத்த துறை பணி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.இதையடுத்து, எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், மண்டல குழு தலைவர் மதியழகன் ஆகியோர் பேசியதாவது:எந்த பணியாக இருந்தாலும், மக்களை பாதிக்காத வகையில் செய்ய வேண்டும். பல பகுதிகளில், ஒருங்கிணைப்பு இல்லாமல் பணி செய்வதாக புகார்கள் வருகின்றன.துவங்கிய பணியை குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்கும் வகையில் திட்டமிட வேண்டும். ஆங்காங்கே பள்ளம் எடுத்து, காரணம் இல்லாமல் பணியை கிடப்பில் போட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டி வரும்.அவசர பணி தவிர்த்து, பிற பணிகளுக்கு கடிதம் வாயிலாக முன் அனுமதி பெறுவதை அந்தந்த துறை அதிகாரிகள் கடைப்பிடிக்க வேண்டும்.முறையாக நீரோட்டம் பார்த்து, வடிகால்வாய் கட்டுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அடுத்த பருவ மழைக்கு, பணி முடிந்த பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ