பள்ளம் எடுத்து கிடப்பில் போடப்பட்ட பணி வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பரிதவிப்பு
சோழிங்கநல்லுார் ஓ.எம்.ஆரில் மெட்ரோ ரயில் பணி நடக்கிறது. இதில், சோழிங்கநல்லுார் சந்திப்பில் நடைபாதை, வாகனங்கள் மற்றும் இரண்டடுக்கு மெட்ரோ ரயில் நிலையம் என, நான்கு அடுக்கு மேம்பாலம் அமைகிறது.இதற்காக, சுற்றியுள்ள கட்டடங்கள் நில ஆர்ஜிதம் செய்யப்படுகிறது. இதனால் சாலை மிகவும் சுருங்கியதால், வாகன நெரிசல் ஏற்படுகிறது.இந்நிலையில், அதே சந்திப்பில் கேபிள்கள் மாற்றி அமைக்க, 10 நாட்களுக்கு முன் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், பள்ளத்தோடு பணி நிறுத்தப்பட்டது.இதனால், சோழிங்கநல்லுார் சந்திப்பில் பீக் ஹவர்ஸ் நேரத்தில் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. சாலையை கடக்கும் பாதசாரிகளும் தடுமாறுகின்றனர்.பொதுமக்கள் பல்வேறு வகைகளில் சிரமப்படுவதால், பணியை உடனே முடிக்கும் வகையில் பள்ளங்கள் தோண்ட வேண்டும் என, அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். ஆனால், பொதுமக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல், சேவைத்துறைகள் அவர்களுக்கு தோணும்போது பள்ளம் எடுத்து, தாமதமாக பணி செய்கின்றனர்.உயர் அதிகாரிகள் தலையிட்டு, பொதுமக்கள் சிரமத்தை போக்கும் வகையில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.