உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மத்திய கைலாஷ் சந்திப்பில் தொடரும் நெரிசல் தினமும் சிக்கித் திணறும் வாகன ஓட்டிகள்

மத்திய கைலாஷ் சந்திப்பில் தொடரும் நெரிசல் தினமும் சிக்கித் திணறும் வாகன ஓட்டிகள்

சென்னை, கிண்டி, சைதாப்பேட்டையில் இருந்து அடையாறு நோக்கி செல்லும் வாகனங்கள், அடையாறு, இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆரில் இருந்து சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு, சார்தார் படேல் சாலை வழியாகவே செல்ல வேண்டும்.இதனால், இந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். குறிப்பாக, மத்திய கைலாஷ் சந்திப்பில் இருந்து கேன்சர் மருத்துமனை வரையும், சின்னமலையில் இருந்து மத்திய கைலாஷ் சந்திப்பு வரை, கடும் நெரிசல் ஏற்படுகிறது.காலை, மாலை நெரிசல் மிகுந்த நேரங்களில், வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்வதால், அரை கி.மீ., துாரத்தை கடக்க, 20 நிமிடம் ஆகிறது என, வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர்.காரணம் என்ன?★ துரைப்பாக்கம், திருவான்மியூரில் இருந்து டைடல் பார்க் வழியாக, மத்திய கைலாஷ் நோக்கி செல்லும் வாகனங்கள், இதற்கு முன் சிக்னலில் நின்று சென்றன. டைடல் பார்க் மேம்பாலம் திறந்தபின், சிக்னலில் நிற்காமல் மேம்பாலம் வழியாக செல்கின்றன. துரைப்பாக்கத்தில் இருந்து செல்லும் வாகனங்களும் காத்திருப்பதில்லை★ அடையாறில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள், மத்திய கைலாஷ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, ஓ.எம்.ஆரில் 800 மீட்டர் சென்று, யு - டர்ன் அடித்து செல்கின்றன. இதனால், டைடல் பார்க் மற்றும் அடையாறில் இருந்து வரும் வாகனங்கள் எந்த சிக்னலிலும் நிற்காமல், சர்தார் படேல் சாலையை அடைகின்றன★ ஓ.எம்.ஆரில் இருந்து மத்திய கைலாஷ் வழியாக, அடையாறு நோக்கி செல்லும் வாகனங்களும், கேன்சர் மருத்துவமனை மேம்பாலத்தின் கீழ் பகுதியில், யு - டர்ன் அடித்து செல்கின்றன. இதனால், மத்திய கைலாஷ் முதல் கேன்சர் மருத்துவமனை சிக்னல் வரை, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.★ கேன்சர் மருத்துவமனை சிக்னலில், கிண்டியில் இருந்து மத்திய கைலாஷ்; கோட்டூர்புரத்தில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் வாகனங்களுக்கு, 2 முதல் 3 நிமிடம் வரை சிக்னல் போடப்படுகிறது. அப்போது, மத்திய கைலாஷில் இருந்து கோட்டூர்புரம் நோக்கி திரும்பும் வாகனங்கள், சாலை முழுதையும் ஆக்கிரமித்து காத்திருக்கின்றன. இதனால், மத்திய கைலாஷில் இருந்து கிண்டி நோக்கி நேராக செல்லும் வாகனங்கள் கடக்க முடிவதில்லை.தீர்வு என்ன?போக்குவரத்து போலீசார் கூறியதாவது:டைடல் பார்க், மத்திய கைலாஷ் சந்திப்பு மேம்பாலத்தால், வாகனங்கள் நிற்காமல் கேன்சர் மருத்துவமனை சிக்னலை அடைவதால், அங்கு மேலும் நெரிசல் அதிகரிக்கிறது.கோட்டூர்புரத்தில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் வாகனங்களை, கேன்சர் மருத்துவமனையில் இடதுபுறம் திரும்பி மத்திய கைலாஷ் சந்திப்பில் யு - டர்ன் செய்து விட்டால், சிக்னலுக்காக காத்திருக்கும் நேரம் குறையும்.மத்திய கைலாஷ் சந்திப்பில் மேம்பாலம் பணி முடிவதை பொறுத்து, யு - டர்ன் செய்யப்படும்.கேன்சர் மருத்துவமனை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள அண்ணா பல்கலை, ஐ.ஐ.டி., கேன்சர் மருத்துவமனை, சிறுவர் பூங்கா, காந்தி மண்டபம் ஆகியவற்றின் காம்பவுன்ட் சுவரை இடித்து, சாலையை விரிவாக்கம் செய்தால், அங்கு ஏற்படும் நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும். அதுவரை, நெரிசல் அதிகரிக்குமே தவிர, குறைய வாய்ப்பில்லை. இதற்கு ஏற்ப, மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'கேன்சர் மருத்துவமனை மேம்பாலத்தின் கீழ் பகுதியில், சாலை விரிவாக்கத்திற்காக ஆய்வு செய்து வருகிறோம். கையகப்படுத்தப்படும் நிலங்கள், வெவ்வேறு துறைகளின் கீழ் இருப்பதால், அதற்கான பேச்சு நடக்கிறது' என்றனர்.இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., அடையாறு, கிண்டி, சைதாப்பேட்டை பகுதியை கடந்து செல்வதைவிட, மத்திய கைலாஷ் சந்திப்பில் இருந்து கிண்டி நோக்கி செல்ல, பல மடங்கு நேரம் ஆகிறது. கேன்சர் மருத்துவமனை சிக்னலில் அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.அவசர சிகிச்சை, அவசர பணி, விரைவு பேருந்து, ரயில், விமானத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியவில்லை. ஆம்புலன்ஸ்களும் சிக்கிக்கொள்கின்றன. நெரிசலை தடுக்க, மாற்று வழிகளை அதிகாரிகள் ஆராய வேண்டும்.- வாகன ஓட்டிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ