உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அசோக் நகரில் நெரிசல் வாகன ஓட்டிகள் அவதி

அசோக் நகரில் நெரிசல் வாகன ஓட்டிகள் அவதி

அசோக் நகர், அசோக் நகர் பில்லர் சந்திப்பில், தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கோயம்பேடு, அசோக் நகர், கிண்டி, கே.கே., நகர் உள்ளிட்ட பகுதிகளை இணைப்பது, அசோக் பில்லர் சிக்னல். அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையம், கே.கே., நகர் அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ., மருத்துவமனை, போலீஸ் பயிற்சி கல்லுாரி உள்ளிட்டவை அமைந்துள்ளன. இச்சாலையில் தினமும், அசோக் பில்லர் சாலை மற்றும் காமராஜர் சாலை சந்திப்பு முதல் அசோக் பில்லர் சிக்னல் வரை 400 மீட்டர் துாரத்திற்கு வாகனங்கள் வரிசைக்கட்டி, ஆமை வேகத்தில் நகர்ந்து செல்கின்றன. அதேபோல், அசோக் பில்லர் சாலையில் இருந்து கிண்டி மற்றும் தி.நகர் செல்லும் அசோக் நகர் முதல் அவென்யூ, 11வது அவென்யூ, கோயம்பேடு செல்லும் 100 அடி சாலை உள்ளிட்ட சாலைகளிலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் மற்றும் சாலை வழியாக வேலைக்கு செல்வோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மத்திய சென்னையின் முக்கிய பகுதியாக விளங்கும் இச்சாலைகளில், 'பீக் ஹவர்ஸ்' எனும் அலுவலக நேரங்களில் கூடுதல் போலீசாரை நியமித்து, போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி