55 ஏசி உட்பட 135 மின்சார பஸ்கள் விரைவில் இயக்க எம்.டி.சி., முடிவு
சென்னை,''சென்னையில், வியாசர்பாடியை தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து, 135 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன,'' என, மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாடை குறைக்கும் நோக்கில், மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில், 625 புதிய தாழ்தள மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக, வியாசர்பாடி பணிமனையில் இருந்து 120 மின்சார பேருந்துகளின் சேவையை முதல்வர் ஸ்டாலின், கடந்த மாதம் 30ம் தேதி துவக்கி வைத்தார். இந்த பேருந்துகளால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் டீசல் செலவு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தகட்டமாக, 135 மின்சார பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர, மாநகர போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் பிரபுசங்கர் கூறியதாவது: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, பல்லவன் பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை ஆகிய ஐந்து பணிமனைகள் வாயிலாக 625 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்காக, 697 கோடி ரூபாயில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக, வியாசர்பாடி பணிமனையில் இருந்து 120 மின்சார பேருந்துகள், 11 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக, பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் 55 'ஏசி' பேருந்துகள் உட்பட, 135 மின்சார பேருந்துகளின் சேவைகளை விரைவில் துவங்க உள்ளோம். தமிழக அரசு இறுதி செய்யும் தேதியில் இப்பேருந்துகள் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.