ஆவடி: பட்டாபிராம், சாஸ்திரி நகரில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவ – மாணவியர் எண்ணிக்கை குறைந்ததால், ஆவடி மாநகராட்சி அதை கிடங்காக பயன்படுத்தி வருவது, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி, பட்டாபிராமில் உள்ள பால விநாயகர் கோவில் தெருவில், ஆவடி மாநகராட்சி தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இப்பள்ளியில், 150க்கும் மேற்பட்டோர் பயின்று வந்தனர். காலப்போக்கில் மாணவ – மாணவியர் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. நடப்பு கல்வியாண்டில் எட்டு மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். அவர்களுடன் சேர்த்து, ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, மொத்தம் 22 மாணவ – மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பின், இப்பள்ளி அதிகாரிகளால் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு, சமீபத்தில் பூட்டு போட்டு மூடப்பட்டது. தற்போது, மாநகராட்சி ஊழியர்கள் ப்ளீச்சிங் பவுடர் மூட்டைகள், கொசு மருந்து தெளிக்கும் இயந்திரங்கள் வைக்கும் கிடங்காக பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து, சாஸ்திரி நகர் பொதுநல சங்க தலைவர் சாமி கூறியதாவது: இரண்டு ஆண்டுகளாக பள்ளி முறையாக திறக்காமல் இருந்தது. சட்டசபை தேர்தலுக்கு பின், மாநகராட்சி பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு பயின்ற மாணவ – மாணவியர், அருகில் உள்ள அரசு பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியை திறந்து, மாணவர்கள் சேர்க்கைக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு தர தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, பள்ளி நிர்வாகம் கூறியதாவது: பள்ளியில் மாணவ – மாணவியர் சேர்க்கை குறைந்தது. இருப்பினும், ஆறு ஆண்டுகளாக பள்ளியை நடத்தி வந்தோம். ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். சமீபத்தில், ஆவடி மாநகராட்சி சார்பில் பள்ளிக்கு பூட்டு போடப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் ஒத்துழைத்தால், மீண்டும் பள்ளி செயல்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். ஆவடி மாநகராட்சி கமிஷனர் அம்பிகா ஜெயின் கூறுகையில், “இப்பிரச்னை குறித்து ஆய்வு செய்து, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.