சென்னை: எண்ணுாரில் நடந்த கொலை வழக்கில், தலைமறைவாக வாழ்ந்து வந்த குற்றவாளியை, எஸ்.ஐ.ஆர்., படிவ விபரத்தை வைத்து, 21 ஆண்டுகளுக்கு பின் போலீசார் கைது செய்தனர். சென்னை, எண்ணுார், இந்திரா நகரைச் சேர்ந்தவர் ரபீக் 35. இவரது மனைவி ரசூல் பீபி. கடந்த 2004 மே 24ம் தேதி, ரபீக் தன் வீட்டில் நண்பர் தாஜிதீன் என்பவருடன் மது அருந்தியுள்ளார். அப்போது, ரசூல் பீபியை குறித்து தாஜிதீன் தவறாக பேசியதால், ஆத்திரமடைந்த ரபீக், தாஜிதீனை கழுத்தை அறுத்து கொலை செய்து தலைமறைவானார். இது குறித்து, எண்ணுார் போலீசார் விசாரித்தனர். கடந்த 21 ஆண்டுகளாக ரபீக் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், உயர் அதிகாரிகளின் உத்தரவை அடுத்து இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. வாக்காளர் பட்டியல் வழியாக, ரபீக்கை தேட முயற்சி மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், ரபீக்கின் இயற்பெயர் ராஜேந்திரன் என்பதும், இவரது தந்தை பெயர் பரமசிவன், கடலுார் ஆக்கனுார் பகுதி பூர்வீகம் என்பதும் தெரிய வந்தது. ஆதாரங்களை வைத்து, தனிப்படை போலீசார் சாதாரண உடையில் எஸ்.ஐ.ஆர்., படிவத்திற்கான விபரங்கள் கோருவது போல், விசாரணை மேற்கொண்டனர். அதில், புகைப்படம் மூலம் குற்றவாளியை அடையாளம் கண்டனர். விசாரணையில், கொலைக்கு பின் ரபீக் நிரந்தரமாக எங்கும் தங்காமல், அரியலுார், ஜெயங்கொண்டம், சேலம், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில், கடைகளில் சாம்பிராணி புகை போட்டு பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இரவு வேளைகளில், பேருந்து நிலையங்களில் படுத்துறங்குவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். தனிப்படை போலீசார் மக்களோடு மக்களாக தங்கி, ரபீக்கை பெங்களூரு மாவட்டம் மாண்டிவாளா சந்தை பகுதியில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரபீக்கிற்கு தற்போது 57 வயது. நேற்று, எண்ணுார் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டார். சிறப்பாக புலனாய்வு செய்து, 21 ஆண்டுகளுக்கு பின், கொலை குற்றவாளியை கைது செய்த எண்ணுார் தனிப்படை போலீசாரை, உயரதிகாரிகள் பாராட்டினர்.