மேடையில் நெருப்பாய் சுழன்ற மைதிலி
ஒ ரே பாடல்; ஒரே ஆள். இடைவிடாமல் ஒரு மணி நேரம் மொத்த அரங்கையும் கண்ணை விட்டு விலகவிடாமல் நாட்டிய நாடகத்தில் அசரடித்தார் நடன கலைஞர் மைதிலி பிரகாஷ். பாரதியின், 'அக்கினி குஞ்சொன்று கண்டேன், சின்னஞ்சிறு கிளியே' உள்ளிட்ட பாடல்கள் மற்றும் அக்கினி மந்திரங்களுக்கு ஏற்ப தன் நாட்டிய அடவுகளை கையாண்டார். தன் நிகழ்ச்சியை மூன்று பிரிவுகளாக பிரித்திருந்தார். முதலில் சூரியன். இரண்டாவது பிறப்பு - இறப்பு. மூன்றாவது பக்தி மார்க்கம். முதலில், சூரியன் மெல்ல மெல்ல உதிப்பதுபோல் தன் நாட்டியத்தை துவக்கினார். ஒவ்வொரு உயிரின் வளர்ச்சியிலும் சூரியன் எப்படி பங்கு வகிக்கிறது என்பதை தெரியப்படுத்தினார். கதிர்வீச்சு எப்படி உலகம் முழுதும் ஒரே நேரத்தில் சூழ்கிறதோ அதுபோல் தி.நகர் கிருஷ்ணகான சபா முழுதும் அவரது நடனம் பிரதிபலித்தது. இரண்டாவதாக, ஒரு தந்தை தன் மகளுக்கு அளவிடாத பாசத்தை அள்ளி அள்ளி தருகிறார். மகளுக்கு தேவையானதை செய்வது, அவரது விருப்பத்தை நிறைவேற்றுவது போன்றவற்றை தன் நாட்டியத்தில் தெளிவுபடுத்தினார். பின், அந்த தந்தை திடீரென இறந்து விட, அந்த துயரை தாங்க முடியாமல் மகள் தவிக்கும் நிலையில், அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. தன் பெண் குழந்தையின் பாசத்தில் இருந்து சகஜநிலைக்கு திரு ம்புகிறார் அந்த மகள். இவர்களின் தாய் - மகள் பாசத்தை வெளிப்படுத்த, 'சின்னஞ்சிறு கிளியே' பாடலை அவர் தேர்ந்தெடுத்தது, சபையினருக்கு பூரிப்பை ஏற்படுத்தியது. மூன்றாவதாக, சிறு அக்னி பெருங்காட்டை சாம்பலாக்கிவிடுகிறது. அதுவே கோவிலில் பூஜிக்கப்படுகிறது. மற்றொரு இடத்தில் இருள் சூழ்ந்த வாழ்க்கையை போக்க மெழுகுவர்த்தியாய் இருக்கிறது. இவற்றை நாட்டியத்தில் உருவகப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ஒரு பிரிவில் இருந்து மற்றொரு பிரிவுக்கு செல்ல அக்னியை பிரதான வழியாக தேர்ந்தெடுத்தது, அவரது, 16 ஆண்டு நாட்டியத்தின் அனுபவம் என்பது தெரிகிறது. மூலக் கதையும் அக்னி, அவரது பிரதி பிம்பமும் அக்னி. சபாவிலும் அ க்னி . இவருக்கு உற்றத்துணையணாக சுமேஷ் நாராயணன், சுஷா, சாய் ரக் ஷித், ரோஹித் ஜெயராமன் ஆகியோரின் அற்புத பங்களிப்பு இருந்தது. - மா.அன்புக்கரசி, ஈரோடு