சென்னையில் நம்ம ஊரு திருவிழா ஜன., 13 - 17 வரை இசை சங்கமம்
சென்னை, டசென்னையில் 18 இடங்களில், ஜன., 13 முதல் 17ம் தேதி வரை, சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நடக்க உள்ளது.சென்னை தலைமை செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில், கலை பண்பாட்டு துறை சார்பில், சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.பின், அவர் கூறியதாவது: பொங்கல் திருவிழாவை சிறப்பிக்கும் வகையில், 'சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா'வை, ஜன., 13ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.தொடர்ந்து, 14 முதல் 17ம் தேதி வரை, காலை 6:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை இந்த நிகழ்ச்சிகள், எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, சைதாப்பேட்டை மாந்தோப்பு அரசுப்பள்ளி வளாகம், நடேசன் நகர், தி.நகர், அண்ணாநகர் டவர் பூங்கா, கோயம்பேடு ஜெய்நகர் பூங்கா, கே.கே.நகர் சிவன்பூங்கா, கொளத்துார் மாநகராட்சி திடல் உட்பட 18 இடங்களில் நடக்க உள்ளது.இதில், 1,500 கலைஞர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்துவர். இந்நிகழ்ச்சி, மதுரை, கோவை, நெல்லையிலும் நடக்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், சுற்றுலா, பண்பாடு, அறநிலையங்கள் துறை செயலர் சந்திரமோகன், கலை பண்பாட்டு துறை இயக்குனர் காந்தி, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற உறுப்பினர் செயலர் விஜயாதாயன்பன், டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை, கவின்கலை பல்கலையின் துணை வேந்தர் சவுமியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.