தேசிய அளவிலான யோகாசனம்: ஹரியானா பல்கலை சாம்பியன்
சென்னை: பல்லாவரத்தில் நடந்த அகில இந்திய பல்கலைகளுக்கு இடையிலான யோகாசன போட்டியில், ஹரியானாவின் குரு ஜம்பேஷ்வரர் பல்கலை, பாரம்பரிய குழு யோகாசனம் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது. அகில இந்திய பல்கலைகளுக்கு இடையிலான யோகாசன போட்டி, பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலையில், கடந்த 18ல் துவங்கி, நேற்று முன்தினம் மாலை நிறைவடைந்தது. இதில், நாடு முழுதும், 168 உயர் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த, 1,670 மாணவர்கள் பங்கேற்றனர். பாரம்பரிய தனிநபர் யோகாசனம், ஆர்ட்டிஸ்டிக் யோகாசனம், ரிதமிக் யோகாசனம் மற்றும் பாரம்பரிய குழு யோகாசனம் ஆகிய நான்கு பிரிவுகளில், போட்டிகள் நடத்தப்பட்டன. பாரம்பரிய தனிநபர் யோகாசனம் பிரிவில், உத்ரகாண்ட் மாநிலம், குமாவுன் பல்கலையை சேர்ந்த பிரிஜேஷ் வர்மா, 244.5 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பெற்றார். இதே பிரிவில், தமிழகத்தின் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் கபிலன், 238.5 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்தார். 'ஆர்ட்டிஸ்டிக்' யோகாசனம் பிரிவில், குஜராத் மாநிலத்தின் பக்தகவி நரசின் மெஹெதா பல்கலையின் வஜா ஷானவாஸ், 141.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். 'ரிதமிக்' யோகாசனம் பிரிவில், பஞ்சாப் மாநிலத்தின் அகல் பல்கலையின் ஹிமான்சு குப்தா, 124.88 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றார். பாரம்பரிய குழு யோகாசனம் பிரிவில், ஹரியானா மாநிலத்தின் குரு ஜம்பேஷ்வரர் பல்கலை முதலிடம் பிடித்து, சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது.