தேசிய சப் - ஜூனியர் வாள் வீச்சு 24 வீரர் - வீராங்கனையர் தகுதி
சென்னை, தமிழ்நாடு வாள் வீச்சு சங்கம் சார்பில், மாநில அளவிலான சப் - ஜூனியர் வாள் வீச்சு போட்டி, கிழக்கு தாம்பரத்தில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில், கடந்த இரண்டு நாட்கள் நடந்தன.இதில், 14 வயதிற்கு உட்பட்ட இருபாலரும் பங்கேற்றனர். 'பாயில், எப்பி மற்றும் சேபர்' ஆகிய மூன்று பிரிவுகளில், தனித்தனியாக போட்டிகள் நடந்தன. போட்டியில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தினர்.இருபாலரிலும், மூன்று பிரிவுகளில் தலா நான்கு இடங்களை, கன்னியாகுமரி, நாமக்கல், திருச்சி, சேலம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 24 வீரர் - வீராங்கனையர் கைப்பற்றினர். இவர்கள், இம்மாதம் ஒடிசாவில் நடக்க உள்ள தேசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.