மாநில நீச்சல் போட்டி நெல்லை வீரர் சாதனை
சென்னை, தமிழக மாநில நீச்சல் சங்கத்தின் சார்பில், 79வது மாநில சீனியர் நீச்சல் மற்றும் டைவிங் போட்டிகள், சென்னையின் வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி., நீச்சல் குள வளாகத்தில், நேற்று காலை துவங்கியது.மாநில சீனியர் போட்டியுடன், 25 வயது முதல் 80 வயதிற்கும் மேற்பட்ட மாஸ்டர்ஸ் பிரிவிலும், நீச்சல் போட்டிகள் நடக்கின்றன.போட்டியில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, வீரர் - வீராங்கனையர் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தினர்.நேற்று காலை நடந்த ஆண்களுக்கான 100 மீ., பட்டர்பிளை பிரிவில், திருநெல்வேலி வீரர் பெனடிக்டன், போட்டியின் துாரத்தை, 53.72 வினாடியில் கடந்து, தனது சாதனையை தானே முறியடித்தார். இதற்கு முன், பெனடிக்டன், கடந்தாண்டு 54.78 கடந்ததே சாதனையாக இருந்தது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.இந்தப் போட்டியில் தேர்வாகும் வீரர் - வீராங்கனையர், ஜூன் 22ம் தேதி, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் துவங்கவுள்ள, 78வது சீனியர் தேசிய நீச்சல் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர்.