ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளைக்கு புதிதாக உறுப்பினர் செயலர் நியமனம்
சென்னை, சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை உறுப்பினர் செயலராக, ராஜேந்திர ரத்னு நியமிக்கப்பட்டு உள்ளார்.சென்னையில், அடையாறு, கூவம், கொசஸ்தலையாறு உள்ளிட்ட ஆறுகள், பல்வேறு பகுதிகள் வழியாக பயணிக்கின்றன. பல ஆண்டுகளாக கண்டு கொள்ளப்படாததால், இவை கழிவுநீர் வெளியேற்றும் கட்டமைப்பாக மாறியுள்ளது. இந்த ஆறுகளை படிப்படியாக சீரமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை என்ற அமைப்பு துவங்கப்பட்டு உள்ளது. இதில், சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வருவாய் துறை உள்பட பல்வேறு துறைகள் இணைந்து செயல்படுகின்றன. சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை உறுப்பினர் செயலராக, மத்திய அரசு பணியில் இருந்து மாநில பணிக்கு திரும்பியுள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேந்திர ரத்னு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதேபோல, மத்திய அரசு பணியில் இருந்து திரும்பியுள்ள மற்றொரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி வெங்கடேஷ், நிதித்துறை சிறப்பு செயலராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை, தலைமைச் செயலர் முருகானந்தம் பிறப்பித்துள்ளார். ***