உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பஞ்சாபில் தயாரான புதிய வகை மெமு ரயில் கூடுதல் இடவசதி இருப்பதால் பயணியர் வரவேற்பு

பஞ்சாபில் தயாரான புதிய வகை மெமு ரயில் கூடுதல் இடவசதி இருப்பதால் பயணியர் வரவேற்பு

சென்னை, பஞ்சாப் மாநிலம், கபூர்தலா ரயில்வே ஆலையில் தயாரிக்கப்பட்ட புதிய வகை 'மெமு' ரயில், சென்னை - அரக்கோணம் தடத்தில் இயக்கப் படுகிறது. இதில், கூடுதல் வசதி உட்பட பல்வேறு வசதிகள் இருப்பதால், பயணியரிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னையில் இருந்து அருகிலுள்ள நகரங்களுக்கு பயணியர் சென்று திரும்ப வசதியாக, 'மெமு' வகை குறுகிய துார பயணியர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. காட்பாடி - அரக் கோணம், சென்னை கடற்கரை - மேல்மருவத்துார், திருத்தணி - சென்னை சென்ட்ரல், சென்னை - திருப்பதி, சென்னை - நெல்லுார் உட்பட 15க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், எட்டு அல்லது ஒன்பது பெட்டி களாக மட்டுமே இணைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் இடவசதி குறைவாக இருக்கும். இந்த ரயில்களில் காலை, மாலை நேரங்களில் நெரிசல் அதிகமாக இருப்பதால், பயணியர் அவதிப்படுகின்றனர். அதனால், புறநகர் மின்சார ரயில்கள்போல் மெமு வகை ரயில்களிலும், 12 பெட்டிகளாக இணைத்து இயக்க, தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்நிலையில், ரயில்வே வாரியம் உத்தரவின்படி, பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவில் உள்ள ரயில்வே ஆலையில் தயாரிக்கப்பட்ட 12 பெட்டிகள் உடைய புதிய வகை 'மெமு' ரயில், தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில் கோட்டத்துக்கு வழங்கப்பட்டது. இந்த ரயில், சென்ட்ரல் - அரக்கோணம் தடத்தில் கடந்த வாரம் முதல் இயக்கப்பட்டு வருகிறது. கூடுதல் இட வசதி உட்பட பல்வேறு வசதிகள் இருப்பதால், பயணியரிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறுகையில், 'பயணியர் தேவை அதிகரித்து வருவதால், தற்போதுள்ள குறுகிய துார மெமு ரயில்களில் அனைத்தும் 12 பெட்டிகளாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். 'அதன்படி, மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் 12 பெட்டிகள் உடைய மெமு ரயில், சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. வரும் ஆண்டுகளில் இந்த வகை ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்' என்றனர்.

புதிய 'மெமு' ரயில் சிறப்புகள்

 தற்போதுள்ள மெமு ரயிலைவிட, 30 சதவீதம் கூடுதல் இட வசதி  அதிக திறன் பிரேக்கிங்  குஷன் இருக்கைகள்  கழிப்பறை வசதி  மேம்படுத்தப்பட்ட கதவுகள், கண்காணிப்பு கேமராக்கள்  பயணியர், ரயில் ஓட்டுநருடன் நேரடியாக பேசும் வசதி  மொபைல் போன் சார்ஜிங் வசதி உள்ளது  ஒரே நேரத்தில் 2,600 பேர் பயணிக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Lakshmanan .N
ஜூலை 26, 2025 11:51

தெற்கு இரயில்வே அதிகாரிகள் கவனத்திற்கு திருநெல்வேலி டூ கொல்லம் . வழி தென்காசி மற்றும் திருநெல்வேலி டூ திருவனந்தபுரம் வழி நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி டூ திருச்செந்தூர் ஆகிய பகுதிகளுக்கு புதிய மெமு இரயில்கள் இயக்க முன்வருவார்களா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை