நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி கல்லுாரி நாள் விழா
சென்னை:மேடவாக்கத்தில் உள்ள நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கல்லுாரி நாள் நடந்தது.இதில், நியூ பிரின்ஸ் கல்வி குழும துணைத் தலைவர் நவீன் பிரசாத் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் உமாதேவி ஆண்டறிக்கை வாசித்தார்.விழாவில், நியூ பிரின்ஸ் கல்வி குழுமங்களின் தலைவர் லோகநாதன் பேசுகையில், ''கல்லுாரிக்கு அதன் நிர்வாகம், உள்கட்டமைப்பு வசதி, சிறந்த பேராசிரியர்கள் ஆகியவற்றை ஏற்படுத்தி தர வேண்டும். அத்துடன் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவது இன்றியமையாதது. இக்கல்லுாரியில், இந்த மூன்று விஷயங்களும் சிறப்பாக அமைந்துள்ளன. இதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.தமிழக முன்னாள் தேர்தல் கமிஷனர் சந்திரசேகரன் பேசுகையில், ''மாணவ பருவத்தில், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நல்வழியில் செல்வதும், தீய வழியில் செல்வதும், இந்த பருவத்தில் தான். எனவே, மனக் கட்டுப்பாட்டோடு இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்,'' என்றார்.விழாவில், கல்லுாரி நிர்வாக அதிகாரி பார்த்தசாரதி, மாநிலக் கல்லுாரி தமிழ் துறை பேராசிரியர் சீதாபதி ரகு, ராமகிருஷ்ணமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.