பெரம்பூரில் ஆர்.பி.எப்., வீரர்களுக்கு 40 படுக்கைகளுடன் புது ஓய்வு அறை
சென்னை :பெரம்பூர் ரயில் நிலையம் அருகில், 40 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய ஓய்வு அறை அமைக்கப்பட உள்ளது.இது குறித்து, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது:ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில், அதிகளவில் பயணியர் வந்து செல்கின்றனர்.பயணியர் பாதுகாப்பை கருத்தில் வைத்து, ரயில்வே பாதுகாப்பு படை ரோந்து பணியை அதிகரித்துள்ளது. இருப்பினும், முக்கிய சந்திப்பு ரயில் நிலையங்களில் நள்ளிரவில் ரயில்வே பாதுகாப்பு படையினர் தங்க, போதுமான ஓய்வு அறைகள் இல்லை. எனவே, சென்னை, திருச்சி, மதுரை, சேலம் கோட்டங்களில், ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு கூடுதலாக ஓய்வு அறைகளை அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தோம். இதற்கிடையே, பெரம்பூர் ரயில் நிலையம் அருகில், 40 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய ஓய்வு அறை அமைக்க, டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.அடுத்த ஆறு மாதங்களில் பணிகள் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.