உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நுாறடி சாலை பால விரிவாக்கம் ஜனவரிக்குள் முடிக்க வேகம்

நுாறடி சாலை பால விரிவாக்கம் ஜனவரிக்குள் முடிக்க வேகம்

சென்னை:கிண்டி கத்திப்பாரா - மாதவரம் நுாறடி சாலையில், 139 கோடி ரூபாயில் துவங்கியுள்ள ரயில்வே மேம்பால விரிவாக்க பணிகளை, வரும் ஜனவரிக்குள் முடிக்க நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. ரயில்வே ஒத்துழைப்பை பெற அமைச்சரும், அதிகாரிகளும் பேச்சு நடத்தி வருகின்றனர்.கிண்டி கத்திப்பாரா - மாதவரம் ரவுண்டானா இடையிலான நுாறடி சாலையில், வாகன நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பாடி சந்திப்பு வழியாகவும், ரெட்டேரியில் இருந்தும் வரும் வாகனங்கள், தாதங்குப்பம் என்ற இடத்தில் ரயில்வே பாலத்தை கடந்து செல்ல வேண்டும்.இந்த பாலம் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போதைய போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் இல்லாததால் அங்கு நெரிசல் ஏற்பட்டு, விபத்துக்களும் ஏற்படுகிறது.இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், ரயில்வே மேம்பாலத்தை ஒருபகுதியில் விரிவாக்கம் செய்ய, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு திட்ட மதிப்பீடு தயாரித்தாலும் நிதி ஒதுக்கப்படவில்லை.இந்த மேம்பாலத்தின் அருகே கண்ணாடி பாலத்துடன் கூடிய வில்லிவாக்கம் சுற்றுச்சூழல் பூங்காவும், வண்ண மீன் விற்பனை அங்காடிகளும் விரைவில் திறக்கப்பட உள்ளன.இதனால், வரும் காலங்களில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, ரயில்வே மேம்பாலத்தை விரிவுப்படுத்க, தமிழக அரசு 139 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இந்த நிதியில் மேம்பால விரிவாக்க பணிகள் வேகமாக நடந்து வருகிறது.இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின்கீழ், தாதங்குப்பத்தில் இருந்து பாடி செல்லும் நுாறடிச்சாலையில் ரயில்வே மேம்பாலம் விரிவுப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக ரயில்வே பகுதியை தவிர்த்து மற்ற இரு புறங்களிலும் பணிகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளது. இப்பணிகள் முடிந்ததும், ரயில்கள் செல்வதற்கு தேவையான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மேம்பால பணியை தொடர வேண்டும். அடுத்தாண்டு ஜனவரிக்குள் மேம்பாலத்தை திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது.அதற்கேற்ப பணிகளை விரைவுப்படுத்த, ஒப்பந்த நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. ரயில்வே ஒத்துழைப்பை பெற, நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு மற்றும் உயர் அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ