திருவொற்றியூர் மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்களுக்காக காத்திருந்த அதிகாரிகள்
திருவொற்றியூர், திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், நேற்று மதியம் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் நடந்தது. காலை 10:00 மணிக்கு கூட்டம் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மண்டல குழு தலைவர் மற்றும் அதிகாரிகள் வந்திருந்தனர். ஆனால், கவுன்சிலர்கள் 12:00 மணிக்கு தான் வந்தனர். இதனால், இரண்டு மணி நேரம் தாமதமாக கூட்டம் துவங்கியது.இதில், மண்டல உதவி கமிஷனர் சுரேஷ், செயற்பொறியாளர்கள் சகுபர் உசேன், பாபு, கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.'குடிநீரில் கழிவுநீர் கலப்பு உள்ளது. உப்பு தன்மை அதிகம் இருப்பதால், குடிக்க முடியவில்லை. ஆரம்ப சுகாதார மையத்தில் மருத்துவர் கிடையாது. 20,000க்கும் மேற்பட்டோர் சரிவர மருத்துவ சேவை கிடைக்காமல் அவதியுறுகின்றனர். கர்ப்பிணியரும் தவிப்பிற்கு ஆளாகியுள்ளனர்' என, பெரும்பாலான கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டினர்.இதற்கு மண்டல நல அலுவலர் லீனா, ''விரைவில், மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படும்,'' என்றார். கோமதி, 2வது வார்டு சுயேட்சை கவுன்சிலர்: விம்கோ நகர், பூம்புகார் நகரில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. மழைக்கு பின், தரமற்ற முறையில் தார்ச்சாலை அமைக்கும் பணியை தனியார் ஒப்பந்த நிறுவனம் மேற்கொள்கிறது. அதற்கு தக்க நடவடிக்கை அவசியம்.சொக்கலிங்கம், 5வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: மற்ற பகுதிகளில் பிடிக்கப்படும் நாய்களை, அன்னை சிவகாமி நகரில் விட்டு செல்கின்றனர். இதற்கு தீர்வு வேண்டும். தமிழரசன், 3வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: மழைநீர் வடிகால் துளைகளில், கொசுவலைகளை பொருத்துவதன் மூலம், கொசுக்கள் வெளியே வருவதை தடுக்க முடியும். சோதனை முயற்சிகள் வெற்றியடைந்துள்ளன. எனவே, தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளவேண்டும். கவி.கணேசன், 12வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: மழைநீர் வடிகால் துளைக்கு கொசுவலை அமைக்கும் முயற்சி வெற்றியடைந்தாலும், மழைகாலத்தில் தண்ணீர் போகாது என்ற அச்சம் உள்ளது. மண்டலத்தில், 11 ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளன. ஆனால், ஐந்து மருத்துவர் மட்டுமே உள்ளனர். அதன் காரணமாகவே, சுழற்சி முறையில் மருத்துவர் மாற்றப்படுகின்றனர்.மண்டல குழு கூட்டத்தில் 105 தீர்மானங்கள் நிறைவேறின.