மாவட்ட எல்லையில் பள்ளம் சீரமைப்பதில் அதிகாரிகள் பனிப்போர்
செம்மஞ்சேரி ஓ.எம்.ஆர்., குமரன்நகர் சந்திப்பில், பெரும்பாக்கம் நோக்கி செல்லும் நுாக்கம்பாளையம் இணைப்பு சாலை, 80 அடி அகலம் உடையது.இந்த சாலை, செம்மஞ்சேரி கால்வாய் வரை, சென்னை மாவட்டம், மாநகராட்சி எல்லையில் உள்ளது. கால்வாய் துவங்கும் சாலை செங்கல்பட்டு மாவட்டம் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. கடந்த 2021ல், கால்வாய் மீது, நுாக்கம்பாளையம் இணைப்பு சாலையில் தரைப்பாலம் அமைக்கப்பட்டது.தரைப்பாலம் சாய்வாக இறங்கும் பகுதியில் திடீரென பள்ளம் விழுந்ததால், அடிக்கடி வாகன விபத்து நடக்கிறது.கட்டடக் கழிவுகள் மற்றும் சிமென்ட் கலவை கொட்டினால், ஓரிரு நாள் தாக்கு பிடிக்கிறது. மீண்டும் பள்ளமாக மாறிவிடுகிறது. இதனால், சாய்வு பகுதியை மொத்தமாக சீரமைக்க வேண்டும்.பள்ளம் விழுந்த பகுதி, இரு மாவட்ட எல்லையில் வருவதால், சென்னை மாநகராட்சியா அல்லது ஊராட்சி நிர்வாகமா என, இரு துறைகளுக்கு இடையே பனிப்போர் நடக்கிறது. ஓர் ஆண்டாக இந்த பிரச்னை நீடிப்பதால், பள்ளத்தால் வாகன ஓட்டிகள், தினமும் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர்.வாகன ஓட்டிகள் கூறியதாவது:இரவில் இருசக்கர வாகனத்தில் வரும்போது, பள்ளம் இருப்பது தெரியாமல் தடுக்கி விழுகிறோம். கர்ப்பிணியர், வயதானோரை வாகனத்தில் அழைத்துச் செல்ல முடியவில்லை.காரின் டயர் பள்ளத்தில் இறங்கும்போது, அடிப்பகுதி சாலையில் உரசி சேதமடைகிறது. மாநகராட்சி, ஊராட்சி, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் பலமுறை கூறியும், கண்டுக்கொள்ளப்படவில்லை.வி.ஐ.பி.,கள் யாராவது சென்றால் மட்டும், பள்ளம் சீரமைக்கப்படுகிறது. அதுவும் ஓரிரு நாள் தான் தாக்கு பிடிக்கிறது.சாலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இரு மாவட்ட நிர்வாகமும் சேர்ந்து நடவடிக்கை எடுக்க, உயர் அதிகாரிகள் வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.