உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எண்ணெய் கழிவு பிரச்னைக்கு விரைவில் தீர்வு: வாரிய அதிகாரி

எண்ணெய் கழிவு பிரச்னைக்கு விரைவில் தீர்வு: வாரிய அதிகாரி

எண்ணுார் :'எண்ணெய் கழிவு விவகாரத்தில், மக்கள் விரைவில் மகிழ்ச்சியடையும் வகையிலான நடவடிக்கை இருக்கும்' என, மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரி தெரிவித்தார். திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகர் - எண்ணுார் முகத்துவாரம் வரையிலான, பகிங்ஹாம் கால்வாயில் சில வாரங்களாக, எண்ணெய் கழிவு கலக்கும் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, மா.கம்யூ., சார்பில், எர்ணாவூர், பாரத் நகர் சந்திப்பில், நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பகுதி குழு செயலர் கதிர்வேல் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில குழு உறுப்பினர் சுந்தர்ராஜன், நான்காவது வார்டு கவுன்சிலர் ஜெயராமன், மாதர் சங்கம் மாவட்ட செயலர் பாக்கியம் உட்பட, 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை கண்டித்து,கண்டன முழக்கங்கள் எழுப்பினர். பின், கோரிக்கைகள் அடங்கிய மனுவை, ராமகிருஷ்ணா நகரில் உள்ள, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வனிதாவிடம் கொடுத்தனர். இதுகுறித்து, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வனிதா கூறியதாவது: எண்ணெய் கழிவு விவகாரம் குறித்து கண்காணிக்க, பறக்கும் படை செயல்பட்டு வருகிறது. பெரிய அளவில் பாதிப்பு இல்லை. லேசான எண்ணெய் திட்டு படர்வது தெரிகிறது. மக்களுக்காகத்தான் நாங்கள் இருக்கிறோம். விரைவில், மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையிலான நடவடிக்கை இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். உப்புக்கு பதிலாக ஆற்று நீர் ''சில ஆண்டுகளுக்கு முன் கூட, எண்ணுார் முகத்துவார பகுதியில், பழைய கஞ்சிக்கு உப்பு போதவில்லை என்றால், ஆற்று நீரை எடுத்து ஊற்றி சாப்பிட்டிருக்கிறோம். இப்போது, ஆறு முழுதும் நஞ்சாகி, சாம்பல் கழிவாகி விட்டது. எண்ணெய் கழிவால் மீனவர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. - பார்த்தசாரதி, மீனவர், தாழங்குப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி