ஒலிம்பியாட் மாநில கபடி விருகை அரசு பள்ளி கில்லி
சென்னை:அரும்பாக்கம், டி.ஜி.வைஷ்ணவா கல்லுாரி சார்பில், 'ஒலிம்பியாட்' எனும் பெயரில், பள்ளிகளுக்கு இடையிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மாணவர்களுக்கான மாநில கபடி போட்டி, அரும்பாக்கம் கல்லுாரி வளாகத்தில், கடந்த இரண்டு நாட்கள் நடந்தது.இதில், சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமாரி என, பல்வேறு மாவட்டங்களில் இருந்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.முதல் அரையிறுதியில், விருகம்பாக்கம் அரசு பள்ளி மற்றும் வண்ணாரப்பேட்டை பி.சி.எஸ்., ஜெயின் பள்ளி மோதின. அதில், 44 - 24 என்ற கணக்கில், விருகம்பாக்கம் அரசு பள்ளி வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.மற்றொரு அரையிறுதியில், மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா பள்ளி, 39 - 30 என்ற கணக்கில், சவுகார்பேட்டை ஏ.ஜி.ஜெயின் பள்ளியை தோற்கடித்தது.விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், விருகம்பாக்கம் அரசு பள்ளி மற்றும் மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா பள்ளிகள் பலப்பரீட்சை நடத்தின.துவக்கத்தில் இருந்தே, விருகம்பாக்கம் அரசு பள்ளி மாணவர்கள் ஆதிக்கம் செலுத்தினர். முடிவில், 50 - 23 என்ற அபார புள்ளிக் கணக்கில், விருகம்பாக்கம் அரசு பள்ளி வெற்றி பெற்றது.மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில், சவுகார்பேட்டை ஏ.ஜி.ஜெயின் பள்ளி, 47 - 43 என்ற கணக்கில் வண்ணாரப்பேட்டை பி.சி.எஸ்., ஜெயின் பள்ளியை வீழ்த்தியது.போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, கல்லுாரி அறக்கட்டளையின் செயலர் அசோக் குமார் முந்த்ரா, பொருளாளர் அசோக் கேடியா, கல்லுாரி முதல்வர் சந்தோஷ்பாபு ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.