உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நாட்டு வெடி வெடித்து 4 பேர் பலியான விவகாரம்: ஒருவர் கைது

நாட்டு வெடி வெடித்து 4 பேர் பலியான விவகாரம்: ஒருவர் கைது

சென்னை: ஆவடியில், நாட்டு வெடி வெடித்து நான்கு பேர் பலியான விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆவடி அடுத்த தண்டுரை, விவசாயி தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 53. இவரது மூத்த மகன் விஜயன், 27; ஆட்டோ ஓட்டுநர். இவர், கூடுவாஞ்சேரி பகுதியில் இருந்து சட்டவிரோதமாக, அதிக சத்தத்துடன் வெடிக்கும் நாட்டு வெடிகள் மொத்தமாக வாங்கி வந்து, வீட்டில் பதுக்கி வைத்து, திருவிழா, இறுதி ஊர்வலம், பண்டிகை போன்ற நிகழ்வுகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு, 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நாட்டு வெடிகள் வாங்கி வந்து, விற்பனைக்காக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருநின்றவூரைச் சேர்ந்த எம்.பி.ஏ., பட்டதாரி சுனில் பிரகாஷ், 23, யாசின், 25, ஆரணியைச் சேர்ந்த சுமன், 22 மற்றும் சஞ்சய், 22 ஆகியோர், நேற்று முன்தினம் நாட்டு வெடிகள் வாங்க விஜயன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது, அவர்கள் வாங்கிய நாட்டு வெடிகள் எதிர்பாராத விதமாக வெடித்து சிதறின. இதில், வீட்டின் கூரை, பக்கவாட்டு சுவர்கள் பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தன இதில், கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய, சுனில் பிரகாஷ், யாசின், சுமன் மற்றும் சஞ்சய் ஆகியோர், உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் நடந்த இடத்தை சுற்றி நள்ளிரவு வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வெடி விபத்தின் ஒலி 2 கி.மீ., துாரத்துக்கு உணரப்பட்டதாக பகுதிவாசிகள் தெரிவித்தனர். தகவலறிந்த பட்டாபிராம் போலீசார் இறந்த நான்கு பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து ஐந்து தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த 35க்கும் மேற்பட்ட வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். மீட்பு பணியில் 'பொக்லைன்' இயந்திரம் ஈடுபட்டிருந்த போது, மேலும் வெடிகள் திடீரென வெடித்ததில் அச்சம் ஏற்பட்டது. ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர், ஆவடி வருவாய்த்துறையினர், தடயவியல் நிபுணர்கள், வெடிகுண்டு நிபுணர் சண்முகம் எஸ்.ஐ., ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். நாட்டு வெடி வெடித்து கோர விபத்து ஏற்படும்போது, விஜயன் பட்டாசு வாங்க வந்த வாடிக்கையாளர் ஒருவரை, வழி அனுப்ப வெளியே நின்று இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர், உடனே தலைமறைவானார். விஜயனை கைது செய்தால் தான், சட்டவிரோதமாக நாட்டு வெடிகள் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டாரா அல்லது வாங்கி பதுக்கி விற்றாரா என்பது தெரிய வரும். இந்நிலையில், சம்பவம் தொடர்பாக, விஜயனின் தந்தை ஆறுமுகம் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரது நண்பர்களிடமும், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி