விபத்தில் நிறைமாத கர்ப்பிணி பலி லாரி டிரைவருக்கு ஓராண்டு சிறை
செங்கல்பட்டு, சென்னை, ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்மனைவி பிரியதர்ஷினி, 25; ஒன்பது மாத கர்ப்பிணி.இவர், 2014, நவ., 28ல், உறவினர் ஒருவருடன், 'ஸ்கூட்டி' வாகனத்தில் சென்றார். குரோம்பேட்டை சிக்னல்அருகே, பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியதில் பிரியதர்ஷினி பலத்த காயமடைந்தார்.அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி பிரியதர்ஷினி மற்றும் வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்தது. குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப் பதிந்து, பொழிச்சலுார் லாரி ஓட்டுனர் பார்த்திபன், 33, என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயஸ்ரீ முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில், வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜரானார்.வழக்கு விசாரணை முடிந்து, குற்றம் நிரூப்பிக்கப்பட்டதால், பார்த்திபனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து, நேற்று முன்தினம் நீதிபதி உத்தரவிட்டார்.