ஆன்லைன் வழி புகார்கள் மீது உடனடி நடவடிக்கைக்கு உத்தரவு
சென்னை: காவல் துறையின் சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்யப்படும் புகார்கள் மீது 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. சென்னையில், அண்ணா சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில், தினசரி விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது, போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால், போக்குவரத்து காவல் துறையின் சமூக வலைதள பக்கங்களில், விதிமீறல் தொடர்பாக பொதுமக்கள் பதிவிடும் புகார் மீதும் நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், 'ஆன்லைன்' மூலம் பதிவு செய்யப்படும் புகார்களுக்கு 24 மணி நேரத்திற்குள், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கமிஷனர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து இணை கமிஷனர்கள், காவல் துறையின் சமூக வலைதள பக்கங்களில் தினமும் எத்தனை புகார்கள் பதிவு செய்யப்பட்டன. அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விசாரித்து வருகின்றனர். அதேபோல், போக்குவரத்திற்கு இடையூறாக, சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.