கால்வாய் பாலத்தை இடித்து 2 அடி உயர்த்தி கட்ட உத்தரவு
வேளச்சேரி, ஆதம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், 20 அடி அகல வீராங்கால் கால்வாய் வழியாக, வாணுவம்பேட்டை, வேளச்சேரியை கடந்து, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அடைகிறது.வேளச்சேரி - பரங்கிமலை 100 அடி அகல சாலையின், வடக்கு மற்றும் தெற்கு திசையில் இந்த கால்வாய் உள்ளது. திறந்தவெளியாக உள்ள இந்த கால்வாயை ஒட்டி, பட்டா நிலங்கள் உள்ளன.அதில், வீடுகள் கட்டும்போது, அதற்காக உருவாக்கப்பட்ட பாதையில் செல்ல வேண்டும். சிலர், 100 அடி அகல சாலையை பயன்படுத்த விரும்பினால், கால்வாய் மீது பாலம் கட்ட, உரிய குத்தகை கட்டணம் செலுத்தி, நீர்வளத்துறையிடம் அனுமதி பெற வேண்டும்.அவ்வாறு, வேளச்சேரி ரயில் நிலையம் அருகே, கால்வாய் மேல் மட்டத்தைவிட, 2 அடி உயரத்தில் பாலம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது; பாலமும் கட்டப்பட்டது.நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அனுமதியை மீறி, தாழ்வாக பாலம் கட்டுவது தெரிந்தது. இதையடுத்து பாலத்தை இடித்து உயர்த்தி கட்ட உத்தரவிடப்பட்டு உள்ளது.நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:வீராங்கால் கால்வாயில், வேளச்சேரி ஏரி உபரிநீரும் சேர்ந்து செல்கிறது. கால்வாய் அகலம் அதிகமான பகுதியில், கால்வாய் மேல் மட்டத்தைவிட, 2 அடி உயர்த்தி கட்ட வேண்டும் என, அனுமதி வழங்கினோம்.ஆனால், கால்வாய் உள்பகுதியில் 2 அடி தாழ்வாக கட்டப்பட்டது. நீரோட்டத்திற்கு தடை ஏற்படும் என்பதால், உயர்த்தி கட்ட வலியுறுத்தினோம். அதன்படி, அனுமதி பெற்ற நபர் இடிக்கும் பணியை துவங்கி உள்ளார். பாலம் கட்டி முடியும் வரை, தொடர்ந்து கண்காணிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.