வீடு ஒப்படைக்க 11 ஆண்டு தாமதம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
சென்னை,குறிப்பிட்ட கால வரம்புக்குள் வீட்டை ஒப்படைக்காத கட்டுமான நிறுவனம், 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பழைய மாமல்லபுரம் சாலை, கேளம்பாக்கத்தில், அக் ஷயா நிறுவனம் சார்பில், 'டுடே' என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தில் வீடு வாங்க, அவிநாஷ் பார்த்தசாரதி என்பவர், 2013ல் ஒப்பந்தம் செய்துள்ளார். வீட்டின் விலையாக பேசப்பட்ட, 39.98 லட்சம் ரூபாயை, பல்வேறு தவணைகளாக செலுத்தி உள்ளார். ஒப்பந்தப்படி, 2016 ஜூலையில் அந்நிறுவனம், வீட்டை ஒப்படைத்து இருக்க வேண்டும். ஆனால், 2023 வரை வீட்டை ஒப்படைக்கவில்லை.அவிநாஷ் பார்த்தசாரதி சார்பில், அவரது முகவர்கள் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் முறையிட்டனர். இந்த மனுவை விசாரித்த, ஆணைய விசாரணை அலுவலர் என்.உமாமகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு: ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலத்தில், கட்டுமான நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை; மனுதாரர், புதிய வீடு பெற, 11 ஆண்டுகள் காத்திருந்தது தெரிகிறது. இதனால் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக, 5 லட்ச ரூபாய்; வழக்கு செலவுக்காக, 50,000 ரூபாயை, 90 நாட்களுக்குள் கட்டுமான நிறுவனம் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.