திடீர் பள்ளங்களால் வளசையில் பீதி
போரூர், வளசரவாக்கம் மண்டலம் போரூர், புத்தர் காலனி பிரதான சாலை வழியாக, நேற்று காலை எம்.சாண்ட் ஏற்றி சென்ற லாரியின் முன் சக்கரங்கள் திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கியது.லாரி ஓட்டுனர் நீண்ட நேரம் போராடியும், லாரியை நகர்த்த முடியவில்லை. இதையடுத்து, ஜே.சி.பி., வரவழைக்கப்பட்டு, மணல் லாரியில் இருந்த எம்.சாண்ட் சாலையின் ஓரத்தில் கொட்டப்பட்டது. ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின், லாரி மீட்கப்பட்டது.தகவல் அறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீர் செய்தனர். இச்சாலையில் சில மாதங்களுக்கு முன், குடிநீர் வாரியம் சார்பில் பள்ளம் தோண்டப்பட்டு, பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணிகள் நடந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்மழை காரணமா?
வளசரவாக்கம் மண்டலம், மதுரவாயல் எம்.எம்.டி.ஏ., காலனி முதல் பிரதான சாலையில், துணை மின் நிலையம் அமைந்துள்ளது.அதன் எதிரே, நேற்று காலை 1.5 அடி ஆழம், 3 அடி அகலத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குடிநீர் வாரியம் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் பள்ளத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். பள்ளம் ஏற்பட்ட பகுதியில் குடிநீர் வாரிய பாதாள சாக்கடை மேல் மூடி அமைந்துள்ளது.தொடர் மழையால், சாலையின் கீழ் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.