பல்லாவரம் அரசு பள்ளியில் சேர்க்கைக்கு திரண்ட பெற்றோர்
பல்லாவரம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், சில ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.பள்ளி கல்வித்துறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்களால், தனியார் பள்ளிகளுக்கு நிகராக, அரசு பள்ளிகளிலும் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருவதே இதற்கு காரணம்.இந்நிலையில், பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து, அரசு பள்ளிகளில், 2025 - 2026ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை, நேற்று துவங்கியது.பல்லாவரம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில், முதல் நாளான நேற்று, தங்களது மகன், மகள்களை பிளஸ் 1 மற்றும் 6ம் வகுப்பில் சேர்க்க, 200க்கும் மேற்பட்ட பெற்றோர் திரண்டனர். அவர்கள், வரிசையில் நின்று, தங்களது பிள்ளைகளை சேர்த்தனர்.இங்கு படிக்கும் மாணவர்கள், கல்வி மட்டுமின்றி, விளையாட்டு உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்குவதே, மாணவர் சேர்க்கை அதிகரிப்புக்கு காரணம் என, பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிகாசி வெங்கட்ராமன் தெரிவித்தார்.