நீண்ட நேரமாக காத்திருந்த ரயில் பாலுாரில் பயணியர் போராட்டம்
மறைமலை :பாலுாரில், விரைவு ரயில் செல்வதற்காக, மின்சார ரயில் நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டதால், அதிருப்தியடைந்த பயணியர் தண்டவாளத்தில் இறங்கி பேராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் நோக்கி, நேற்று இரவு 8:15 மணிக்கு, புறநகர் மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. செங்கல்பட்டு - காஞ்சிபுரம் தடம் பாலுாரில், மும்பையில் இருந்து நாகர்கோவில் வரை இயக்கப்படும் நாகர்கோவில் விரைவு ரயிலுக்கு வழிவிட, புறநகர் மின்சார ரயில் இரண்டாவது நடைமேடையில் நிறுத்தப்பட்டது. ஆனால் 30 நிமிடங்களுக்கும் மேலாகியும் விரைவு ரயில் வராததால், ஆத்திரமடைந்த பயணியர், புறநகர் மின்சார ரயிலின் முன்புறம் தண்டவாளத்தில் அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்திற்குப் பின், பாலுார் ரயில் நிலையம் வந்த நாகர்கோவில் விரைவு ரயிலையும் சிறை பிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த பாலுார் போலீசார் மற்றும் செங்கல்பட்டு ரயில்வே போலீசார், பயணியரிடம் பேச்சு நடத்தினர். அதன் பின், அவர்கள் கலைந்து சென்றனர். இது குறித்து ரயில்வே போலீசார் கூறியதாவது: செங்கல்பட்டு - அரக்கோணம் வரை, ஒரே தண்டவாளம் மட்டுமே உள்ளது. பாலுார், வாலாஜாபாத் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் மட்டுமே, விரைவு ரயிலுக்கு வழிவிட, 'லுாப்'பில் நிறுத்த முடியும். அதனால் தான், மின்சார ரயில் நிறுத்தப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.