சிறப்பு ரயில்களை முறையாக இயக்காததால் பயணியர் அவதி
சென்னை, செங்கல்பட்டு - கடற்கரை தடத்தில், மின்சார சிறப்பு ரயில்கள் நேற்று, சரியான நேரத்துக்கு இயக்காததால், பயணியர் அவதிப்பட்டனர்.சிங்கபெருமாள் கோவில் ரயில்வே பணிமனையில், பராமரிப்பு பணி நடப்பதாக கூறி, 12 மின்சார ரயில்களின் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டது.இருப்பினும், பயணியர் வசதிக்காக, காட்டாங்கொளத்துாரில் இருந்து கடற்கரைக்கு ஏழு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த ரயில்கள் சரியான நேரத்துக்கு இயக்காததால், ரயில் நிலையங்களில் காத்திருந்து பயணியர் அவதிப்பட்டனர்.இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:முன்பெல்லாம், சனி, ஞாயிறுகளில் தான் பராமரிப்பு பணி மேற்கொண்டு, மின்சார ரயில்களை ரத்து செய்வர். தற்போது, அலுவலக நாட்களிலும் மின்சார ரயில்களை ரத்து செய்கின்றனர். மேலும், அறிவிக்கப்படும் மின்சார சிறப்பு ரயில்களும் சரியான நேரத்துக்கு இயக்குவதில்லை.செங்கல்பட்டு - கடற்கரை மார்க்கத்தில் நேற்று மின்சார ரயில்களுக்காக, பயணியர் ஒரு மணிநேரம் வரை காத்திருக்க வேண்டி இருந்தது. அறிவிக்கப்பட்ட சில சிறப்பு ரயில்களும் சரியான நேரத்திற்கு இயக்காததால், பயணியர் அவதிப்பட்டனர்.எனவே, பராமரிப்பு பணிக்காக மின்சார ரயில்கள் ரத்து செய்யும் நேரங்களில், மாற்று ஏற்பாடுகளை நிர்வாகம் செய்ய வேண்டும். குறிப்பாக, விரைவு பாதைகளிலும், மின்சார சிறப்பு ரயில்களை இயக்கினால், பயணியருக்கு மிகவும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.