பிளாஸ்டிக் பயன்பாட்டை மக்கள் தவிர்க்க வேண்டும்: மேயர் பிரியா
சென்னை:சென்னை, பெரம்பூர் ஜமாலியாவில், பிளாஸ்டிக் குப்பையை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு பேரணியை, ஹிந்த சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, மாணவ மாணவியர் பங்கேற்றனர்.பின், மேயர் பிரியா அளித்த பேட்டி:பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக பேரணி, திரு.வி.க.நகர் மண்டலத்தில் நடந்துள்ளது. இனி, மாதம் தோறும் இறுதி சனிக்கிழமைகளில், அனைத்து மண்டலங்களிலும் நடத்தப்படும். பேரணி மட்டுமின்றி, மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில், துாய்மை பணியையும் செய்ய உள்ளோம். குப்பைகளை சேகரிப்பது தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். அடுத்த தலைமுறையை பாதுகாக்கும் பொறுப்பு நம்மிடம் உள்ளது. பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வுக்காக, மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், சென்னை மாநகராட்சிக்கு, 75 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில், வியாபாரிகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில், 50,000 மஞ்சள் பைகளை வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டும் மஞ்சப்பை வழங்கப்பட்டு வருகிறது. கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் பாட்டில்களை போட, தனியாக குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. தனிநபரிடம் மாற்றம் கொண்டு வந்தால்தான் சமுதாயத்தில் மாற்றத்தை காண முடியும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்பாட்டை மக்கள் தவிர்க்க வேண்டும். மழையால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாலை பணிகள் மீண்டும் துவக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.