உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 8 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலை நாற்று நட்டு மக்கள் நுாதன போராட்டம்

8 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலை நாற்று நட்டு மக்கள் நுாதன போராட்டம்

திருவேற்காடு : எட்டு ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமான சாலையில், பகுதி மக்கள் நாற்று நட்டு, நகராட்சி மீதான தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். திருவேற்காடு நகராட்சி, மேல் அயனம்பாக்கம் ஐந்தாவது வார்டில் உள்ள எட்டீஸ்வரர் கோவில் பிரதான சாலை 1.5 கி.மீ., துாரம் உடையது. இங்குள்ள ஆறு குறுக்கு தெருக்களில், 1,500க்கும் மேற்பட்ட வீடுகள், தனியார் பள்ளிகள், சிறு குறு நிறுவனங்கள் உள்ளன. எட்டீஸ்வரர் கோவில் பிரதான சாலை, கடந்த எட்டு ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை. இதனால், குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இவ்வழியாக இருசக்கர வாகனங்களில் செல்லும் முதியோர், பெண்கள் பள்ளத்தில் தடுமாறி விழும் சம்பவங்கள் அடிக்கடி நடந்தன. இது குறித்து, திருவேற்காடு நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையில், சாலை முழுதும் மழைநீர் தேங்கி, பல இடங்களில் திடீர் குட்டைகள் உருவாகி குளம் போல் மாறி உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பகுதி மக்கள் 30க்கும் மேற்பட்டோர், திருவேற்காடு நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, செட்டி தெரு பிரதான சாலை சந்திப்பில், வி.சி., நிர்வாகி முத்துகுமார் என்பவர் தலைமையில், நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்; போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, எட்டீஸ்வரர் கோவில் பிரதான சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் இறங்கி, நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டு, பகுதி மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவேற்காடு போலீசார், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். 30 ஆண்டு பழமையான கிணற்றை காணோம் இது குறித்து, வி.சி., நிர்வாகி முத்துகுமார் கூறியதாவது: எட்டீஸ்வரர் கோவில் பிரதான சாலை சீரமைக்கப்பட்டு எட்டு ஆண்டுகளாகிறது. விபத்து உயிர்பலி அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், இச்சாலையை சீரமைக்க வேண்டும். அதேபோல, 30 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த, 30 அடி ஆழமுள்ள பொது கிணற்றை காணவில்லை. அது, தனியார் நிறுவனத்தால் மண் கொட்டி மூடப்பட்டு உள்ளது. அதை கண்டுபிடித்து தர வேண்டும். மேலும், இரண்டாவது வார்டில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியின்போது தோண்டி எடுக்கப்பட்ட மண்ணை சேகரித்து வைக்க வேண்டும். ஆனால், நகராட்சி நிர்வாகம் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் செய்து, மண் திருட்டில் ஈடுபட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி