ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற கோரி மனு
சென்னை, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்தாண்டு ஜூலை 5ல் வெட்டிக் கொல்லப்பட்டார்.இந்த வழக்கில், ரவுடி நாகேந்திரன், அவரின் மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்பட 27 பேரை, செம்பியம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.வழக்கு விசாரணை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்தாண்டு அக்டோபரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குற்றம்சாட்ட நபர்களிடம் நகலும் வழங்கப்பட்டது.இந்நிலையில், இந்த வழக்கை செம்பியம் போலீசார் நியாயமாக விசாரிக்கவில்லை; சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் இம்மானுவேல் என்ற கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் மனு தாக்கல் செய்துள்ளார்.மனு விபரம்ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்ற விபரங்களில் பல முரண்பாடுகள் உள்ளன.வழக்கில் பல சாட்சிகள் சேர்க்கப்படவில்லை. கொலையில் பல முக்கிய அரசியல் கட்சியினரின் தொடர்பு உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. அவ்வாறு இருக்கும்போது, மாநில காவல்துறையால் வழக்கை சுதந்திரமாக கையாண்டிருக்க முடியாது.கொலையில் தொடர்புடைய 'சம்பவம்' செந்தில் உள்ளிட்டோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய போலீசார் இதுவரை, முழுமையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. எனவே, விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.**