ஹைதராபாத் விமானத்தில் திடீர் பழுது கண்டறிந்த விமானியால் விபத்து தவிர்ப்பு
சென்னை: ஹைதராபாதிற்கு புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட திடீர் இயந்திர கோளாறை, தக்க நேரத்தில் விமானி கண்டறிந்து ஓடுபாதையில் நிறுத்தியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 79 பயணியர் உயிர் தப்பினர். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, நேற்று காலை 6:00 மணிக்கு, ' ஸ்பைஸ் ஜெட் ' விமானம், ஹைதராபாத் புறப்படத் தயாரானது. விமானத்தில் 74 பயணியர், ஐந்து ஊழியர்கள் இருந்தனர். விமானம் ஓடு பாதையில் ஓடத் துவங்கியபோது, விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டிருப்பதை, விமானி கண்டுபிடித்தார். உடனே, சென்னை விமான நிலைய அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு, விமானத்தை ஓடு பாதையில் நிறுத்தினார். பின் இழுவை வாகனம் உதவியுடன், விமானம் புறப்பட்ட இடத்திற்கு இழுத்து வரப்பட்டு நிறுத்தப்பட்டது. விமானப் பொறியாளர்கள், விமானத்தில் ஏறி, இன்ஜின்களை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டனர். அதிலிருந்த பயணியர் கீழே இறக்கப்பட்டு, விமான நிலையத்தில் உள்ள ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். பழுது நீக்கும் பணி தாமதமானதைத் தொடர்ந்து, பயணியர் வேறு விமானத்தில், ஹைதராபாத் அனுப்பி வைக்கப்பட்டனர். விமானத்தில் பழுது ஏற்பட்டிருப்பதை, விமானி தகுந்த நேரத்தில் கண்டு பிடித்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பட்டாசு மாசால் விமானங்கள் தாமதம் தீபாவளி பண்டிகையையொட்டி, நேற்று முன்தினம் இரவு மக்கள் வெடித்த பட்டாசுகளால், சென்னை புகை மண்டலமாக மாறியது. குறிப்பாக இரவு 7:00 மணிக்கு, சென்னை விமான நிலையப் பகுதியில், புகை மண்டலம் அதிகரித்தது. இதனால், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய, ஏழு விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. ஏழு வருகை விமானங்கள் தரையிறங்க தாமதம் ஏற்பட்டது. '3டி ஸ்கிரீனில்' கலாசார நிகழ்ச்சி தீபாவளியையொட்டி நேற்று முன்தினம், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், முதல் மற்றும் மூன்றாவது முனையங்களிலும், சர்வதேச விமான நிலையம், இரண்டாவது முனையத்திலும், '3டி ஸ்கிரீன்'கள் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றில், நம் நாட்டின் இயற்கை எழில் மிகுந்த பகுதிகள், சுற்றுலா தலங்களின் சிறப்பு காட்சிகள், வன விலங்குகள், கிராமப்புற விளையாட்டுகள், நம் நாட்டின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை விளக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டன. இதை பயணியர் கண்டு களித்தனர். மேலும், '3டி ஸ்கிரீன்'கள் நிரந்தரமாக அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.