சென்னை, கொலை, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என, கொடூர குற்றங்களில் ஈடுபட்டு வந்த, 'ஏ பிளஸ்' ரவுடிகளான, ராக்கெட் ராஜா, நெடுங்குன்றம் சூர்யா, லெனின் ஆகியோர், ஓராண்டுக்கு சென்னைக்குள் நுழைய தடை விதித்து, கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள, ஆனைகுடி பகுதியைச் சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. இவர் மீது, ஐந்து கொலைகள், ஆறு கொலை முயற்சி என, 20 வழக்குகள் உள்ளன.சென்னை தாம்பரம் அருகே, நெடுங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா. இவர் மீது, ஐந்து கொலைகள், 12 கொலை முயற்சி என, 64 வழக்குகள் உள்ளன. இவர், அம்பேத்கர் பெயரில் தனி அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார்.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, நடுவீரப்பட்டு என்ற பகுதியைச் சேர்ந்தவர் லெனின். இவர் மீது, ஆறு கொலைகள், 12 கொலை முயற்சி என, 28 வழக்குகள் உள்ளன. மூவரும், கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என, கொடூர குற்றங்களில் ஈடுபட்டு வரும், 'ஏ பிளஸ்' ரவுடிகள். இவர்கள் மூவரும், ஓராண்டுக்கு சென்னை மாநகர எல்லையில் நுழைய தடை விதித்து, கமிஷனர் அருண் நேற்று உத்தரவிட்டுள்ளார்.இவர்கள், நீதிமன்ற வழக்குகள், காவல் துறையினர் விசாரணைக்கு மட்டுமே, சென்னை மாநகர எல்லைக்குள் வந்து செல்லலாம்; வேறு எந்த காரணத்திற்காகவும் வரக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. ரவுடிகள் மூவரும் பொது மக்களின் உடமைக்கும், உயிருக்கும் அச்சுறுத்தல் தரக்கூடியவர்கள். இவர்கள் தங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சாட்சிகளை மிரட்டிக் கூடியவர்கள் என, அடையாளம் காணப்பட்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவர்கள் சென்னையில் இருந்தால், உடனடியாக வெளியேற்றவும், துணை கமிஷனர்களுக்கு கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.***