குத்தகை வீட்டை அடமானம் வைத்தால் மோசடி வழக்கு ஐகோர்ட்டில் காவல் துறை உறுதி
சென்னை, 'குத்தகை வீடுகளை உரிமையாளருக்கு தெரியாமல் விற்றாலோ, அடமானம் வைத்தாலோ சிவில் வழக்கு பதியாமல், மோசடி வழக்கு பதிய அறிவுறுத்தப்பட்டு உள்ளது' என, சென்னை உயர்நீதிமன்றத்தில், காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.சென்னை கோயம்பேடு திருவீதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர், தி.நகரைச் சேர்ந்த கனகராஜ் என்பவருக்குச் சொந்தமாக, முகப்பேரில் உள்ள வீட்டை குத்தகைக்கு எடுத்துள்ளார்.இந்த வீட்டை, அதன் உரிமையாளருக்கு தெரியாமல் மூன்றாம் நபருக்கு அடமானம் வைத்துள்ளார். இதுகுறித்து, நொளம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கில், ராமலிங்கத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம், 2023 ஏப்.,13ல் ஜாமின் வழங்கியது.இதை எதிர்த்து, வீட்டின் உரிமையாளர் கனகராஜ் வழக்கு தொடர்ந்தார்.ராமலிங்கம் மோசடி செய்தது தெரிய வந்ததும், ஜாமினை ரத்து செய்த உயர்நீதிமன்றம், போதிய விழிப்புணர்வு இல்லாததால், பல மாவட்டங்களில் இதுபோன்ற மோசடிகள் நடப்பதை தடுக்க, டி.ஜி.பி., உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.இந்த வழக்கு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் அரசு வழக்கறிஞர் எஸ்.சந்தோஷ் ஆஜராகி, டி.ஜி.பி.,யின் சுற்றறிக்கையை தாக்கல் செய்தார்.அதில், 'சென்னையை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும், குத்தகை வீடுகளை விற்பது, அடமானம் வைப்பதாக புகார்கள் வருகின்றன. இந்த புகார்களை, சிவில் வழக்காக பதிவு செய்யாமல், மோசடி வழக்காக உடனே பதிந்து விசாரிக்க, அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.மோசடியை தடுக்கவும், கண்காணிக்கவும் மாவட்டம் தோறும் உயர் மட்ட அளவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த மோசடியை தடுக்க தயாரிக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ, சமூக வலைத்தளங்களில் ஒளிபரப்பப்படும்' என, குறிப்பிடப்பட்டு உள்ளது..விழிப்புணர்வு வீடியோவை பார்வையிட்ட நீதிபதி, விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி மேற்கொண்ட டி.ஜி.பி., சங்கர் ஜிவால், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ஆவடி கமிஷனர் சங்கர் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தார். விழிப்புணர்வு வீடியோவை சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகளில் வெளியிட்டு, இதுபோன்ற மோசடிகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.***